ஆண்டுதோறும் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான அகில இந்திய நீட் பிஜி (PG – முதுநிலை) தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2020ஆம் ஆண்டுக்கான நீட் பிஜி தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
நாடு முழுவதும் உள்ள சுமார் 30,774 மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான இடங்களுக்கு (MD, MS) அகில இந்திய நீட் பிஜி தேர்வு ஜனவரி மாதம் மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. [அதற்கான குறிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது](https://minnambalam.com/k/2019/11/22/25).
இந்த அறிக்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு (OBC) மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று(நவம்பர் 21) மக்களவையில் திமுக, OBC வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு நிராகரிக்கப்பட்டது குறித்து மக்களவையில் விவாதிக்க திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தது. திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு இது குறித்து கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், இன்று(நவம்பர் 22) திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் நீட் பிஜி தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
**திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்**
அனைத்து ‘இடஒதுக்கீடு’ விவரங்களும் அடங்கிய வெள்ளை அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே பிரதமர் மோடி வெளியிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “2017-18 ஆம் ஆண்டுகளில் பொதுத் தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட 9,966 மருத்துவ இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு 2,689 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி ஆகிய மருத்துவ இடங்கள் ‘மண்டல் கமிஷன்’ அடிப்படையிலான 27 சதவீத ஒதுக்கீட்டின்படி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அந்த வருடத்தில் மத்திய அரசு கல்லூரிகளில் கிடைத்ததோ வெறும் 260 சீட்டுக்கள்!
2018-19-ஆம் ஆண்டில் 12,595 மருத்துவ இடங்கள் பொதுத் தொகுப்பிற்கு அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 3,400 மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒதுக்கப்பட்டதோ 299 இடங்கள் மட்டுமே! இரு வருடங்களிலும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 5,530 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி மருத்துவ இடங்கள், இடஒதுக்கீடு கொள்கையைப் புறக்கணித்து, பறிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பா.ஜ.க. ஆட்சி மத்தியில் பொறுப்பேற்றதில் இருந்தே, மத்திய அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படுவதில்லை என்ற நிலையில், இப்போது பொதுத் தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களிலும் ‘இடஒதுக்கீட்டை’ நிராகரிப்பது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரைத் திட்டமிட்டு வஞ்சிக்கும் போக்காகும். ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின அமைச்சர்கள் எண்ணிக்கை அடியோடு குறைக்கப்பட்டு விட்டது.
‘நீட்’ தேர்வு மூலம் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் மருத்துவக் கல்வியைப் பாழ்படுத்திய மத்திய பா.ஜ.க. அரசு – இப்போது அரசியல் சட்டப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டு உரிமையையும் தட்டிப் பறிப்பது மாபெரும், மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.
ஆகவே, பொதுத் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 2017-18, 2018-19-ஆம் ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எத்தனை மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டன? மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் 27 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் எவ்வளவு? என்பது உள்ளிட்ட அனைத்து ‘இடஒதுக்கீடு’ விவரங்களும் அடங்கிய வெள்ளை அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
**பாமக நிறுவனர் ராமதாஸ்**
ஐஐடி, ஐஐஎம்களில், கடந்த காலங்களில் சமூக நீதி மறுக்கப்பட்டதற்கு மத்திய அரசு பரிகாரம் செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27சதவிகித இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்தே மக்கள்தொகை அடிப்படையிலான இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. அதன்படி ஒட்டுமொத்தமாக 49.50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
ஆனால், நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகளில் வெறும் 12சதவிகிதம் மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் கூட நுழைவுநிலைப் பணிகளான உதவிப் பேராசிரியர் பணிகளில் மட்டும் தான் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தால் அவை பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்கப்படுவது தான் கொடுமையாகும்.
2018 ஆம் ஆண்டில் ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்த 682 பேரில் 16 பேரும், 2019 ஆம் ஆண்டில் 271 பேரில் 5 பேரும் மட்டும் தான் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர் என்பதிலிருந்தே ஐஐடிகளில் சமூக நீதி எந்த அளவுக்குப் படுகொலை செய்யப்படுகிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளலாம். இட ஒதுக்கீட்டைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே அடுத்த பல ஆண்டுகளுக்கு ஆசிரியர்களே நியமிக்கப்படாமல் போகலாம். எனவே, கடந்த காலங்களில் சமூக நீதி மறுக்கப்பட்டதற்கு மத்திய அரசு பரிகாரம் செய்ய வேண்டும்.
**திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி**
அரசு வெளியிட்டுள்ள ஆணையில், 10 சதவிகிதம் உயர்ஜாதியில் ஏழையினருக்கு (EWS) மொத்தமுள்ள 15,387 இடங்களிலும் இடம் கொடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், உயர் ஜாதியினருக்குத் தனியாக மேலும் பொதுப் பிரிவில் உள்ள 7,693 இடங்கள் போக, 1,538 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், 27 சதவிகிதம் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதால், வெறும் 300 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இழப்பு 3,800 இடங்கள். இது மிகப்பெரிய சமூக அநீதியாகும், கொடுமையிலும் கொடுமையாகும்.
இவ்வளவுக்கும் மக்கள் தொகையில் மிகவும் அதிகமானவர்கள் பிற்படுத்தப்பட்டோரே(மண்டல் குழு அறிக்கைப்படி 52 விழுக்காடு). ஜனநாயகப்படி பெரும்பான்மையான மக்களுக்குரிய உரிமை வழங்கப்படுவதற்கு மாறாக மறுக்கப்படுவது கொடூரம்.
தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பு!
தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மேலும் சுமார் 1,758 மருத்துவப் பட்ட மேற்படிப்பிற்கான இடங்கள் இங்கே; அதிலும் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது. இருந்த போதிலும், இந்த 1,758 இடங்களில் 50 சதவிகிதம் அதாவது 879 இடங்களை மத்திய அரசிடம் கொடுத்து விடுகிறோம். சுமார் 450 மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்களை ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோரும் மருத்துவ இடங்களை இழக்கிறார்கள்.
�,”