கோவையில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நான்காண்டுகளுக்கு முன்பு அரியலூரைச் சேர்ந்த அனிதா, நீட் தேர்வால் மருத்துவ இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வடுவே தமிழக மக்கள் மனதிலிருந்து நீங்காத நிலையில், நீட் தேர்வு காரணமாக ரித்து, வைசியா என அடுத்தடுத்து தமிழக மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில் கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆர்எஸ் புரம், வெங்கடசாமி சாலை பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகள் சுபஸ்ரீ (19).
சிபிஎஸ்இ பாடப்பிரிவில் 12ஆம் வகுப்பு முடித்துள்ள சுபஸ்ரீ கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 451 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். அப்போது பல் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்தும், பொது மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்பதற்காக மீண்டும் கோவையில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில் நீட் தேர்வுக்காகப் பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் ஊரடங்கினால் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றமும் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
இந்த சூழலில் அடுத்த மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவோமா, இல்லையா என்ற மனக் குழப்பத்தில் சுபஸ்ரீ இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மன அழுத்தத்தில் அவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சுபஸ்ரீயின் தாயார் சுமதி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் . அதே சமயத்தில் தற்கொலை குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மாணவியின் தற்கொலை குறித்து திமுக எம்.பி. கனிமொழி இன்று (ஆகஸ்ட் 19) தனது ட்விட்டர் பக்கத்தில், நீட் தேர்வால் மன அழுத்தம் தாங்காமல் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. கொரோனா காரணமாக இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
**-கவிபிரியா**�,