நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பமாக இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வு மற்றும் செப்டம்பர் தொடக்கத்தில் நடைபெறவுள்ள ஜேஇஇ தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 27) விளக்கமளித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “ஒவ்வொரு நாளும் தேர்வு தொடர்பாக அதிகளவிலான மெயில்கள் எனக்கு வருகின்றன. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகத் தேர்வுக்குத் தயாராகி வருவதால் மாணவர்களும், பெற்றோர்களும் மன அழுத்தத்தில் உள்ளனர். எனவே தேர்வை நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்த கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே தீர்வு என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நீட் தேர்வுக்கு எதிராக 7 மாநில முதல்வர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய இருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கல்வியை அரசியலாக்குவது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
நேற்று ஹால் டிக்கெட் வெளியானவுடன் 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வுக்கும், 7.5 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கும் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் அதிகளவு மாணவர்கள் ஒரே நாளில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்திருப்பது அவர்கள் தேர்வெழுத விரும்புவதைக் காட்டுவதாகவும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் குறிப்பிட்டுள்ளார்.
**-கவிபிரியா**�,