நீட் தேர்வு: ஹால் டிக்கெட், வழிமுறைகள் வெளியீடு!

Published On:

| By Balaji

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் எதிர்ப்புக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றமும் மறுப்புத் தெரிவித்துவிட்டது.  நீட் தேர்வைப்  போன்று  பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதன்மை தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை இன்று (ஆகஸ்ட் 26) வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தேர்வு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

**எப்படி பெறுவது?**

[https://ntaneet.nic.in/ntaneet/welcome.aspx](https://ntaneet.nic.in/ntaneet/welcome.aspx) என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்குள் சென்று, Download Admit Card  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும், பின்னர் விண்ணப்ப எண், கடவுச்சொல் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு வரிசை எண், தேர்வு மைய எண், முகவரி, கேள்வித் தாள் மீடியம், தேர்வு மையத்துக்குள் நுழையும் நேரம்,  கேட் மூடப்படும் நேரம்  ஆகியவை ஹால்  டிக்கெட்டில் இடம் பெற்றிருக்கும்.

**வழிகாட்டு நெறிமுறைகள்**

 ஜேஇஇ தேர்வு மையங்கள் 570ல் இருந்து 660ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  நீட் மையங்கள் 2546ல் இருந்து 3843 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜேஇஇ தேர்வு கணினி அடிப்படையிலும், நீட் தேர்வு  paper-pen அடிப்படையிலும் நடத்தப்படும்.

ஜேஇஇ மெயின் தேர்வுகளுக்கான ஷிஃப்டுகள் 8-ல் இருந்து 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. அதேபோல ஒவ்வொரு ஷிஃப்டுக்கான மாணவர் எண்ணிக்கை 1.32 லட்சத்திலிருந்து 85 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு ஒரு அறைக்கு  அனுமதிக்கப்படுவோரின் மாணவர்களின் எண்ணிக்கை 24ல் இருந்து 12ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

தேர்வு அறைக்கு வெளியே மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்களும், கண்காணிப்பாளர்களும் தேர்வு மையத்துக்குள் நுழையும் போது  வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

இதில் அறிகுறிகள் தென்பட்டால் மாணவர்கள் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

மேலும் மாணவர்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இல்லை என்றும் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share