நீட் தேர்வில் உதித் சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்ததைத் தொடர்ந்து தற்போது கோவை தனியார் கல்லூரியில் பயின்று வந்த இரு மாணவர்களின் சான்றிதழ்களில் சந்தேகம் இருப்பதாக அக்கல்லூரி டீன் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடத்தப்படும் நீட் தேர்வில் உதித் சூர்யா என்ற மாணவர் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவான உதித் சூர்யாவைத் திருப்பதியில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தேனி சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரனும் ஆஜராகியுள்ளார். அவரது அலுவலகத்திலும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை பி,எஸ்.ஜி. தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து முதலாம் ஆண்டு பயின்று வந்த இரு மாணவர்களின் நீட் ஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்படங்கள் வெவ்வேறாக இருப்பதாகச் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களின் சேர்க்கை உள்ளிட்ட சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பின் போது இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அக்கல்லூரி டீன் ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் 150 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. கல்லூரியின் விசாரணைக்குக் குழு மேற்கொண்ட சான்றிதழ் சரிபார்ப்பில் ஒரு மாணவர், மாணவியின் நீட் ஹால்டிக்கெட்டில் உள்ள புகைப்படமும் மாறுபட்டிருப்பது தெரியவந்தது. இருவரின் பெற்றோர்களையும் அழைத்து விசாரித்ததில் புகைப்படம் சரியானது தான் என்று தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குக் கல்லூரியில் இடம் ஒதுக்கி ஆணை கொடுத்தது தேர்வுக்குழு தான். தேர்வுக்குழு கொடுத்துள்ள ஒதுக்கீட்டு ஆணையின் புகைப்படமும் மாணவர்களின் தற்போதைய புகைப்படமும் சரியாக இருக்கிறது. ஆனால் நீட் ஹால்டிக்கெட் புகைப்படம் தான் மாறுபட்டிருப்பது போல் உள்ளது.
விசாரணைக்காக மாணவர்கள் சென்னை மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கைரேகை, ஆவணங்கள் உள்ளிட்டவற்றைத் தேர்வுக் குழு சரிபார்க்கும். இந்த சந்தேகம் குறித்தும், முறைகேடு நடைபெற்றதா இல்லையா என்பது குறித்தும் தேர்வுக் குழுதான் நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த மாணவர்கள் காஞ்சிபுரம் மற்றும் தர்மபுரியைச் சேர்ந்தவர்கள் என்றும் சிபிஎஸ்இ பள்ளியில் படித்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இதில் அனைத்து மாணவர்களின் ஆவணங்களும் சரியாக இருப்பதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.�,