என்னதான் நீட் தேர்வுக்கு தமிழகம் உட்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினாலும், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் வைத்தே இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றன.
வருகிற ஜூலை மாதம் 17ஆம் தேதி, இந்த கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நீட் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது தொடங்கி மே மாதம் 6ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பலவித தரப்பினரிடம் எழுந்த தொடர் கோரிக்கையால் மே 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக மே 20 ஆம் தேதி இரவு 9 மணி வரை அவகாசம் நீட்டிப்பு செய்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை முதல்முறையாக 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்த கல்வி ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 10.64 லட்சம் பேர் ஆண்கள். 8.07 லட்சம் பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதேபோல தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத 1 லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், நீட் தேர்வை தமிழில் எழுத 31 ஆயிரத்து 803 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.