Zஅமைச்சருடன் திமுக எம்.எல்.ஏ.க்கள்!

Published On:

| By Balaji

அதிமுக அரசின் முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்துகொள்ளும் அரசு விழாக்களில் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்துகொள்வது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சகஜமாகி வருகிறது. அரசு விழா என்பதால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வது கூட ஒரு வகையில் ஆரோக்கியமான விஷயம்தான்.

ஆனால், திமுக எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு தமிழகத்தில் டெங்குக் காய்ச்சலே இல்லை என்று சொல்லியிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அதற்கு அங்கேயே எவ்வித ரியாக்‌ஷனும் காட்டவில்லை திமுக எம்.எல்.ஏ.க்கள் இருவரும். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்திருக்கிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 6 ஆம் தேதி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களான நூலக விரிவாக்கம், நர்ஸ் விடுதி திறப்பு விழா, புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, நவீன மருத்துவ உபகரணங்கள் இயக்கத்தை துவக்கி வைக்கும் விழா ஆகியவற்றுக்காக வருகை தந்தார்.

நாங்குநேரியில் பிரசாரத்தில் இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியான தளவாய் சுந்தரம் ஆகியோர் விழா நடக்கும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் முன்னதாகவே நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், நாகர்கோவில் நகர திமுக செயலாளர் ராஜேஷ் ஆகியோர் விழாவிற்கு சென்றுவிட்டனர்.

திமுக எம்.எல்.ஏ.க்களைப் பார்த்த பத்திரிகையாளர்கள், ‘டெங்கு குறித்து புகார் கொடுக்க வந்திருக்கிறார்கள் போல’ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

கட்டிடங்கள் திறந்து வைக்கும் நிகழ்வில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அமைச்சரின் அருகே செல்லவில்லை. நவீன இயந்திரங்கள் திறந்து வைக்கும்போது திமுக எம்.எல்.ஏ.க்களைப் பார்த்துவிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், ‘வாங்கண்ணே… வாங்கண்ணே…’ என்று கூப்பிட்டார்.

நவீன மருத்துவ உபகரணங்கள் தொடக்கவிழாவின் போது பேசிய அமைச்சர், “இந்த நவீன உபகரணங்கள் சென்னை, விழுப்புரம் மருத்துவமனைகளில்தான் இருக்கின்றன. இதன் பின் கன்னியாகுமரியில் இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. அண்ணன் தளவாய் சுந்தரம் என்னிடம் எப்போதும் மக்களுக்காக கோரிக்கை வைத்துக் கொண்டே இருப்பார். அந்த வகையில் இந்தத் தேவைகளை நிறைவேற்றியுள்ளோம்’ என்று குறிப்பிட்டார். புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டல் விழாவுக்கும் இரு திமுக எம்.எல்.ஏ.க்களும் சென்றார்கள். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்குப் பாராட்டுவிழாவும் இந்த விழாவின் அங்கமாக நடந்தது. அப்போது அமைச்ச்ர்களுடன் உட்கார்ந்திருந்தார்கள் இரு திமுக எம்.எல்.எ.எக்களும்.

அதற்கு முன் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “டெங்கு மரணம் அண்டை மாநிலங்களான கேரளா, தெலங்கானா மாநிலங்களில் நடந்திருக்கிறது. சிங்கப்பூரில் கூட டெங்குவால் மரணம் அடைகிறார்கள். ஆனால் தமிழகத்தில் டெங்குவால் யாரும் மரணம் அடையவில்லை” என்றார்.

அப்போது ஒரு செய்தியாளர், “திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைகளைப் பார்வையிட்டு டெங்குவால் பாதிப்பு கடுமையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறாரே?” என்று கேட்க, அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர், “அவர் பேட்டியை நான் இன்னும் படிக்கவில்லை. இந்த அரசின் மக்கள் பணியில் பாராட்டும் விதமாகத்தான் அண்ணன் சுரேஷ் ராஜனும், அண்ணன் ஆஸ்டினும் இங்கே வந்திருக்கிறார்கள். இங்கே நீங்களே பார்க்கிறீர்கள்” என்று கூற இரு திமுக எம்.எல்.ஏ.க்களும் அமைச்சருக்குப் பக்கத்திலேயே நின்றார்கள்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share