மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க மருத்துவமனை முதல்வர்கள், இயக்குநர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் தொல்லைக்கு ஆளாகுகின்றனர். அதுபோன்று கடைநிலை ஊழியர்கள் முதல் மருத்துவர், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தாலும், தொடர்கதை போன்று நீண்டுகொண்டே செல்கிறது.
ஆசிரியரின் பாலியல் தொல்லையால் கோவையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டு பெண் மருத்துவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல், மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஹோட்டல்களில் தங்கி தனிமைப்படுத்தி கொண்டு வருகின்றனர். மருத்துவப் பணியாளார்கள் கொரோனா நோயாளிளுடன் பணியாற்றுவதால், அவர்கள் மூலம் குடும்பங்களுக்கு தொற்று நோய் பரவாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதுபோன்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அங்கு தங்கியிருந்த மருத்துவர் வெற்றிச்செல்வன் (35) பெண் மருத்துவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதுபோன்று, மருத்துவர் மோகன்ராஜ் (28), மற்றொரு பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர்கள் இருவரும் மருத்துவமனை டீனிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து டீன் அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வெற்றிச்செல்வன், மோகன்ராஜ் ஆகியோரை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு ஏதேனும் உள்ளதா என மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகளில் முதல்வர்களும், இயக்குநர்களும் நேரடியாக சென்று, விசாரிக்க வேண்டும். அப்போது, ஏதேனும் புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பணி காரணமாக தனியார் விடுதிகளில் தங்கியுள்ள பெண் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு ஏதேனும் பாலியல் தொந்தரவு உள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அனைத்து மருத்துவமனை, மருத்துவ கல்லூரி முதல்வர்கள், இயக்குநர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
**-வினிதா**
�,