ஆரணியில் பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்த சிறுமி லோசினியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தருவதாக கூறியதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், பிரியாணி கடை உரிமையாளர் மற்றும் சமையல் மாஸ்டர் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணா சாலை பகுதியில் செவன் ஸ்டார் என்ற பிரியாணி கடையை அம்ஜித் பாஷா என்பவர் நடத்தி வந்தார். துந்தரீகம்பட்டைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் தனது மனைவி பிரியதர்ஷினி, மகன் சரண்(14), மகள் லோசினி(10) ஆகியோருடன் செப்டம்பர் 8ஆம் தேதி செவன் ஸ்டார் கடையில் பிரியாணியும், தந்தூரி சிக்கனும் சாப்பிட்டனர்.
சாப்பிட்டு விட்டு வீடு திரும்பிய அவர்களுக்கு சிறிது நேரத்திலேயே வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நால்வரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் லோசினி மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அன்றைய தினம் அதே ஹோட்டலில் சாப்பிட்ட மற்றவர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டு, உணவக உரிமையாளர் அமிஜித் பாஷா மற்றும் சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று(அக்டோபர் 22) நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் உணவகத்தை தரமாக பராமரித்து வருவதாகவும், கவனக்குறைவு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இழப்பீடாக சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
40 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதையும், இழப்பீடு வழங்குவதையும் கருத்தில்கொண்டு, இரண்டு வாரங்களுக்கு தினமும் காலை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் செலுத்தியதற்கான ஆவணங்களை ஆரணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
**-வினிதா**
�,