தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
ஆசிரியராக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும், தேசிய நல்லாசிரியர் விருது டெல்லி, விக்யான் பவனில் செப்டம்பர் 5ஆம் தேதியன்று குடியரசுத் தலைவரால் வழங்கப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி முறையில் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 44 ஆசிரியர்களை ஒன்றிய கல்வி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி மற்றும் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகிய இருவரும் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து ஸ்ரீ ஜெயசுந்தர், மணப்பேடு அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு டெல்லி விக்யான் பவனில் செப்டம்பர் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் விருது வழங்கப்படும்.
தலைமை ஆசிரியை ஆஷா தேவி 2013ஆம் ஆண்டு மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், ”தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திருச்சி மாவட்டம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி, ஈரோடு மாவட்டம்,மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
**-வினிதா**
�,