கைதி திரைப்படத்தில் பிஜோய் கதாபாத்திரத்தில் நடித்த நரேனின் நடிப்பு வெகுவான பாராட்டைப் பெற்று வரும் நிலையில், அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் அவர்.
சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமான நரேன், அஞ்சாதே படத்தின் மூலம் தனக்கான அடையாளத்தை உருவாக்கினார். அதன் பின்னர் இவர் தேர்ந்தெடுத்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறாத நிலையில், நல்ல கதைக்காக நீண்ட வருடங்கள் காத்திருக்கத் தொடங்கினார் நரேன். அவரது காத்திருப்பை அறுவடை செய்யும் விதமாக கைதி படத்தில் இவர் நடித்த பாத்திரம் அமைந்திருந்தது.
கைதி திரைப்படம் வெளியாகும் முன்பே, ‘இப்படம் எனக்கு செகண்ட்-இன்னிங்க்ஸ் தான்’ என நம்பிக்கையோடு தெரிவித்திருந்தார் நரேன். கைதி படத்தில் நாயகன் கார்த்தியுடன் படம் முழுக்க பயணிக்கும் முக்கியக் கதாபாத்திரம் ஏற்றிருந்த நரேன், தனது முதிர்ச்சியான நடிப்பினால் பாராட்டை பெற்றார். இது குறித்து, ஆங்கில நாளிதழ் ஒன்றிக்கு பேட்டியளித்த நரேன், கைதி திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அஞ்சாதே படத்தினால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் எனக் கூறியிருக்கிறார். அப்படத்தை பார்த்த லோகேஷுக்கு படத்தை விட, நரேனின் கதாபாத்திரம் நீண்ட நாட்கள் மனதில் தங்கியதாக கைதி படப்பிடிப்பின் போது கூறியிருக்கிறார்.
அஞ்சாதே படம் வெளியான சமயம், லோகேஷ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். இதில் சுவாரஸ்யம் என்னவெனில், அச்சமயம் ரசிகனாய் படம் பார்த்த லோகேஷ் தான் பின்னாட்களில் இயக்குநராக மாறி, நரேனுக்கு அடுத்த இன்னிங்ஸை ஏற்படுத்தியிருக்கிறார். நரேனின் வார்த்தைகளில் சொல்லப்போனால், இது போன்ற நல்ல திருப்புமுனைக்காக கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் அவர் காத்திருந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட அஞ்சாதே படத்திற்குப் பின் இருபது படங்களுக்கும் மேல், ஒப்பந்தமாகி பின்னர் பல்வேறு காரணங்களால் அப்படங்கள் கைவிடப்பட்டிருக்கின்றன. துவக்கத்தில் இதன் காரணமாக ‘தான் சினிமாவுக்கு பொருந்தாத ஆளோ’ என்றும் யோசித்திருக்கிறாராம் நரேன். ஆனாலும், அதன் பின்னர் சினிமா குறித்த தொடர்ச்சியான தேடல், கற்றலில் ஈடுபட்ட நரேனுக்கு கைதி மீண்டும் வாய்ப்பளித்திருக்கிறது.
நரேன் நாயகனானதிற்கு முன்பு, ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். கைதி வெளியானதிற்கு பின்பு ராஜீவ் மேனன் நரேனை அழைத்து மனதார பாராட்டியுள்ளார். தற்போது நரேன் கள்ளன் என்ற மலையாள படத்திலும் சாம்பியன், ஒத்தைக்கு ஒத்த போன்ற தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
�,”