Nஇம்ரானுக்கு நன்றி சொன்ன மோடி

Published On:

| By Balaji

பாகிஸ்தான் நாட்டின் நரோவல் மாநிலத்தின், கர்தர்புர் நகரிலுள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்(Gurdwara Darbar Sahib) கோவிலுக்கு, இந்தியாவிலுள்ள சீக்கிய மதத்தினர் தரிசனம் செய்யச் செல்வதற்கான செக் போஸ்ட் திறப்பு விழா, பஞ்சாப் மாநிலத்தின் லாகூர் எல்லையில் நடைபெற்றது. 4.5 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை பாகிஸ்தானின் எல்லையிலுள்ள கர்தர்புர் சாஹிப் கோவிலையும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தையும் இணைக்கிறது.

சீக்கிய மதத்தை உருவாக்கிய குரு நானக், தனது மிக நீண்ட பயணத்துக்குப் பிறகு அமர்ந்த இடம் கர்தர்புர். கிட்டத்தட்ட 18 வருடங்கள் அந்த இடத்திலிருந்து, சீக்கியர்களை ஒருங்கிணைத்து சீக்கிய மதத்தின் பெருமைகளை போதித்துவந்தார்.

1539இல் குரு நானக் இறந்த பிறகு, 1925இல் பட்டியாலா நாட்டின் அரசர் சர்தார் புபேந்தர் சிங் கொடுத்த ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தில் தற்போதைய கோயில் கட்டப்பட்டது. பாகிஸ்தான் அரசாங்கம் 1995இல் அதனை மறுகட்டமைப்பு செய்யத் தொடங்கி 2004ஆம் ஆண்டு முழுமையாக முடிக்கப்பட்டது.

பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே அவ்வப்போது ஏற்பட்டுவந்த பிரச்சினைகளின் காரணமாக, கர்தர்புர் சாஹிப் கோயிலுக்குச் சென்று சீக்கியர்கள் தரிசனம் செய்வது மிகப்பெரிய பிரச்சினைக்குள்ளானது.

ஆனால், இப்போது பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, எவ்வித பிரச்சினையும் இல்லாமல் பஞ்சாப் மாநிலம் வழியாக, கர்தர்புர் சாஹிப் கோயிலுக்குச் சென்று சீக்கியர்கள் வழிபட தற்போதைய சாலை உருவாக்கப்பட்டது.

கர்தர்புர் காரிடர் என்றழைக்கப்படும் இந்த சாலையைத் திறந்து வைக்க சுல்தான் லோதி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சுல்தான் லோதி மாநிலத்திலுள்ள குருத்வாரா பெர் சாஹிப் என்ற இடத்தில் சீக்கிய மதகுருவான குரு நானக்குக்கு மரியாதை செலுத்தினார். இந்த இடத்திலுள்ள இலந்தை மரத்திற்கு 14 வருடங்கள் பூஜை செய்து குரு நானக் வழிபட்டு வந்தார்.

சுல்தான் லோதியில் குரு நானக்குக்கு மரியாதை செலுத்திவிட்டு கிளம்பிய பிரதமர் நரேந்திர மோடி, கர்தர்புர் காரிடர் திறப்பு விழா நடைபெறும் மேடையை வந்தடைந்தார். குரு நானக் பிறந்த 550ஆவது வருடத்தை கொண்டாடும் வகையில் நாணயம் ஒன்றை மோடி வெளியிட்டார்.

விழா மேடையில் பேசிய நரேந்திர மோடி “குரு நானக் தேவ் அவர்களின் 550ஆவது பிறந்தநாளுக்கு முன்பாக கர்தர்புர் காரிடாரைக் கட்டி முடித்ததற்கு முதலில் பாராட்டைத் தெரிவிக்கிறேன். இந்தியர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு இந்த கர்தர்புர் காரிடாரைத் திறக்க உதவிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நியாசிக்கு எனது நன்றிகளை தெரிவிக்கிறேன். ஒற்றுமையுடன் வாழ வேண்டிய கருத்துகளை குரு நானக் பரவச்செய்தார். அவரது 550ஆவது பிறந்தநாளுக்கு முன்பாக இரு நாடுகளும் சேர்ந்து அவரது கோவிலுக்குச் செல்வதற்கான காரிடாரைக் கட்டி முடித்தது அளவில்லா மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இந்த கட்டுமானப் பணியில் சேர்ந்து உழைத்த அனைவருக்கும் எனது நன்றி. இந்த காரிடார் திறப்புக்குப் பிறகு குருத்வாரா தர்பார் சாஹிப் கோவிலுக்குச் செல்வது சுலபமான ஒன்றாக இருக்கும். சட்டப்புரிவு 370ஐ நீக்கியதால் ஜம்மு & காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த சீக்கியர்களுக்கும் இதே உரிமை கிடைக்கும். குடியுரிமை திருத்தச் சட்டம், சீக்கியர்களுக்கு உதவும் வகையில் இருக்கும். குரு நானக் அவர்களின் உள்ளார்ந்த போதனைகளை நாம் வணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

நரேந்திர மோடி கொடியசைத்து வைக்க, கர்தர்புர் சாஹிப் கோயிலை நோக்கிச் செல்லும் முதல் வாகனத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமெரிந்தர் சிங், 117 பஞ்சாப் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பஞ்சாப்பின் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி-க்கள் உள்ளிட்ட 500 பேர் பயணமாகின்றனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share