திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு திருப்பூர் இயற்கை கழகத்தினர், பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே சுமார் 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. இதில் சுமார் 280 ஏக்கர் பரப்பளவில் மீன்பிடிப்பு பகுதியாக நீர் நிறைந்து காணப்படுகிறது.
நஞ்சராயன் குளத்துக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் என இதுவரை 181 பறவை இனங்கள் வந்துள்ளன. உள்நாட்டு பறவைகளான கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, பழுப்பு நாரை, செந்நீல நாரை, பெரிய கொக்கு, நடுத்தர கொக்கு, சிறிய கொக்கு, உண்ணி கொக்கு, மடையான், இராக்கொக்கு, சிறிய நீர்காகம், நடுத்தர நீர்காகம், பளபளக்கும் அரிவாள் மூக்கன், நீல தாழைக்கோழி, தென் சிட்டு, நெடுங்கால உள்ளான், கானாங்கோழி, புள்ளிமூக்குவாத்து, புள்ளிப்புறா, மாடப்புறா, பட்டைக்கழுத்து புறா போன்ற பறவைகளும், வெளிநாட்டு பறவைகளான தட்டை வாயன், நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, கிளுவை போன்ற வாத்துகளும், கடற்பறவைகளான மண்கொத்தி, சதுப்பு மண்கொத்தி, பொரி மண்கொத்தி, சிறியபட்டாணி, உப்புக்கொத்தி, சிறிய கொசு உள்ளான், பவழக்கால் உள்ளான், பேதை உள்ளான், டெமினிக் கொசு உள்ளான், கருவால் உள்ளான் போன்ற பறவைகள் இதுவரை ஏராளமானவை வந்துள்ளன.
ஆனால், இந்தக் குளத்தில் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் இருந்து வரும் சாயக்கழிவுகள் கலந்து குளத்தின் நீர் மாசுபட்டு இருந்தது. இதையடுத்து இயற்கை ஆர்வலர்களும், பொதுமக்களும் குளத்தை சீரமைக்க வேண்டுமெனவும் அதிக அளவில் பறவைகள் வந்து செல்வதால் இதை பறவைகள் சரணாலயமாக அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து தமிழக அரசு 2015ஆம் ஆண்டு ரூ.4 கோடி மதிப்பீட்டில் நஞ்சராயன் குளத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து குளத்தைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன், “பல வருடங்களாக நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். தற்போது அறிவிப்பு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதற்கு ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. முதல்கட்டமாக குளம் முழுவதும் வனத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்படும். அதைத் தொடர்ந்து விளக்கக் கூடம் அமைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு பறவைகளைப் பற்றிய விளக்கப்படங்கள் அமைக்கப்படும்.
குளத்தைச் சுற்றி சுகாதாரமற்ற முறையில் இருக்கும் சூழ்நிலை மாற்றப்பட்டு அனைவரும் வந்து செல்லும் இடமாக மாற்றி அமைக்கப்படும். குளத்துக்குள் மணல் திட்டுகள் புல்வெளி திட்டுகள் அமைக்கப்பட்டு அதிக அளவில் பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக மாற்றி அமைக்கப்படும். மேலும் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டது திருப்பூர் பகுதிக்கு சுற்றுலாத்தலமாக மட்டுமில்லாமல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குப் பறவைகளைப் பற்றி பல்வேறு விஷயங்களை கற்கும் இடமாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.
**-ராஜ்-**
.