நாங்குநேரி பட்டுவாடா: திமுக மீது காங்கிரஸ் சந்தேகம்!

Published On:

| By Balaji

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிடும் நிலையில் அவருக்காக இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

இத்தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கும்போதே, “அதிமுக அசுரத் தனமாக பணத்தை செலவு செய்யும். எனவே அதற்கு ஈடு கொடுப்பது போன்ற வேட்பாளரை தேர்வு செய்யுங்கள்” என்று அழுத்தம் கொடுத்தது திமுக. அதையடுத்துதான் பண பலம் மிக்க ரூபி மனோகரனை வேட்பாளராக்கியது காங்கிரஸ்.

திமுகவின் தேர்தல் பணிகளுக்கான செலவை காங்கிரசே கவனித்துக் கொள்ளும் நிலையில் வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் திமுகவிடம் காங்கிரஸ் ஏற்கனவே ஒப்படைத்துவிட்டது. அந்த வகையில் பணப் பட்டுவாடாவுக்கென குழு அமைத்து நேற்று முதல் நாங்குநேரியில் வாக்காளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியை காங்கிரஸுக்காக திமுக தொடங்கிவிட்டது. திமுக சார்பில் 5 பேர், காங்கிரஸ் சார்பில் இருவர் அடங்கிய பணப்பட்டுவாடா குழு அமைக்கப்பட்டு தொகுதி முழுக்க பணப்பட்டுவாடா நேற்று நடந்திருக்கிறது. இதற்கான மொத்தப் பொறுப்பும் நெல்லை திமுக எம்.பி. ஞானதிரவியத்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நேற்று (அக்டோபர் 15) களக்காடு ஒன்றியம் திருக்குறுங்குடியில் பண விநியோகம் செய்யப்பட்டபோது அந்த குழுவில் காங்கிரஸ் காரர்களை கூப்பிடாமலேயே சென்று பட்டுவாடாவை முடித்துவிட்டனர். திருக்குறுங்குடி பகுதி பணப்பட்டுவாடா குழுவில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காங்கிரஸார் இடம் பெற்றிருந்தார்கள். அவர்கள் இல்லாமலேயே பணப்படுவாடா நடைபெற்றுவிட்டதால், கோபமான காங்கிரஸார் வேட்பாளரிடமும், காங்கிரஸ் மாவட்ட முக்கியஸ்தர்களிடமும் விஷயத்தைக் கொண்டு போனார்கள்.

‘நாங்கதானே பணம் கொடுத்தோம். எங்களுக்காகதானே நீங்க கொடுக்கிறீங்க? அப்புறம் குழுவுல காங்கிரசை ஏன் புறக்கணிக்கணும்? திருக்குறுங்குடி உட்பட பல இடங்கள்ல காங்கிரஸ்காரங்க இல்லாமலேயே பணப்பட்டுவாடா நடந்திருக்கு. இதை எப்படி நாங்க முழுசா நம்புறது?’ என்று காங்கிரஸ் புள்ளிகள் திமுக எம்பி ஞானதிரவியத்திடம் இன்று காலை கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு எம்.பி. “திமுகவினரை சந்தேகப்படாதீங்க. உங்களுக்காகதான் நாங்க இழுத்துப் போட்டுக்கிட்டு வேலை செய்யறோம். கச்சிதமா முடிச்சுடுவோம்” என்று சமாதானம் பேசி அனுப்பி வைத்திருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து திமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “காங்கிரஸ் தொகுதின்னு சொல்றாங்க. ஆனா காங்கிரஸ் கமிட்டி இருக்கே தவிர காங்கிரஸ்காரன் யாரும் இல்லை. பணப்பட்டுவாடா குழுவுல பாதிக்கும் மேற்பட்ட இடத்துல உள்ளூர் காங்கிரஸ்காரங்களே இல்ல. லோக்கல் திமுக காரங்கதான் எங்க தலைவர் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, ஐ. பெரியசாமி வார்த்தைக்குக் கட்டுப்பட்டு பணப்பட்டுவாடாவை முடிச்சிருக்கோம்” என்கிறார்கள்.

இந்த பஞ்சாயத்துக்கு இடையே காங்கிரஸ் வேட்பாளருக்காக ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் நாங்குநேரியில் கொடுத்து முடிக்கப்பட்டிருக்கிறது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel