காங்கிரசின் பாரம்பரிய தொகுதி என்று அக்கட்சியால் பெருமை பாடப்பட்டு வந்த நாங்குநேரி தொகுதியை இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் பலமாக பிடுங்கியிருக்கிறது அதிமுக. அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணனும், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிட்டார்கள். இவர்கள் இருவருமே முக்கியமான வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டார்கள். தேர்தல் முடிவில், எம்பி ஆன வசந்தகுமாருக்காக ஒரு எம்.எல்.ஏ.வை இழந்திருக்கிறது காங்கிரஸ்.
**2016 நிலவரம்**
2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக நாங்குநேரியில் தனித்துக் களமிறங்கியது. அப்போது அதிமுக 57 ஆயிரத்து 617 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் திமுக கூட்டணியில் 74 ஆயிரத்து 932 வாக்குகளைப் பெற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார். அப்போது அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் தனித்துப் போட்டியிட்டு 8% பெற்று 14 ஆயிரத்து 203 வாக்குகளைப் பெற்றது.
**அதிமுக, திமுக கூட்டணிகள்**
2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் முடிவின் பேரில் தனித்து நின்ற அதிமுக இப்போதைய தேர்தலில் கூட்டணியோடு களமிறங்கியது. அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக கூட்டணியில் நாங்குநேரியில் அதிமுகவைத் தவிர சொல்லிக் கொள்ளும்படியான கூட்டணிக் கட்சிகள் இல்லை. மாறாக தொகுதியில் கணிசமான வாக்குகளை வைத்திருக்கும் புதிய தமிழகம் அதிமுக அரசின் மீது கடுமையான புகார்களைச் சொல்லி கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. எனவே அதிமுக கிட்டத்தட்ட தனித்துப் போட்டியிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதேநேரம் தொகுதியில் பாரம்பரிய வலிமை பெற்ற காங்கிரஸ், களவேலைக்கு பெயர் பெற்ற திமுக, மதிமுக, இடதுசாரிகள் என்ற கூட்டணி கெத்தோடு களமிறங்கியது. ஆனாலும் திமுக கூட்டணியை கூட்டணி என்ற பெயரில் தனியாகவே களம் கண்ட அதிமுக வீழ்த்திவிட்டது.
**காங்கிரசின் வேட்பாளர் தேர்வு**
நாங்குநேரியில் இடைத்தேர்தல் நடைபெறும் பட்சத்தில் அதை திமுகவுக்கே ஒதுக்கிவிடலாம், காங்கிரஸ் அதில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவில்தான் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி தனிப்பட்ட அபிப்ராயம் வைத்திருந்தார். ஆனால் கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க அழுத்தத்துக்கு இணங்க தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தார்.
அதிமுக பணத்தை அதிகமாக செலவு செய்யும் என்பதால் அதற்கு ஈடு கொடுக்கும் வேட்பாளரைத் தேட வேண்டிய நிர்பந்தம் காங்கிரஸுக்கு ஏற்பட்டது. அந்த சூழலில்தான் காஞ்சி மாவட்ட காங்கிரஸ் தலைவரான ரூபி மனோகரனை நாங்குநேரியில் களமிறக்கினார்கள். சொந்தக் கட்சியினரிடத்திலேயே இறக்குமதி வேட்பாளர் என்ற பெயரை முதலில் சம்பாதித்துவிட்டார் ரூபி மனோகரன்.
இதன் பின் திமுகவிடம் தேர்தல் செலவுக்கான தொகையை காங்கிரஸ் ஒப்படைத்துவிட்ட பின்னரும் அது தொடர்பாக திமுக காங்கிரஸுக்கு இடையே சரியான ஒத்துழைப்பு இல்லை. தொகுதி திமுகவுக்குத்தான் என்று காத்திருந்த மாவட்ட திமுக பிரமுகர்கள், வேட்பாளர் தேர்வின் மூலம் விரக்தி அடைந்து ஒதுங்கிக் கொண்டனர்.
**அதிமுகவுக்கு கை கொடுத்த தேவேந்திர குல வேளாளர் புறக்கணிப்பு**
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நாங்குநேரி தொகுதியில் இருக்கும் தேவேந்திர குல வேளாளர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்தனர். இதன் மூலம் தங்களது முப்பதாயிரம் முதல் 50 ஆயிரம் வாக்குகள் யாருக்கும் கிடைக்கவில்லை என்று அவர்கள் சொல்கின்றனர். இந்த வாக்குகள் திமுக கூட்டணியான காங்கிரசுக்குச் செல்ல வேண்டியவை என்று கணக்குப் போட்டுத்தான் ஆரம்பத்திலேயே, புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை கழற்றிவிட்ட அதிமுக அதேநேரம் தொகுதியில் இருக்கும் அமமுகவின் முக்குலத்து நிர்வாகிகளை கையில் போட்டுக் கொண்டது.
தேவேந்திர குல வேளாளர்களை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்றால் முக்குலத்து ஓட்டுகள் வரும் என்று கணக்கு போட்டு அதில் ஓரளவு வெற்றியும் கண்டது அதிமுக. அதேநேரம் தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகளையும் பெற முடியாமல் எம்.எல்.ஏ. சரவணகுமார் மூலம் அவர்களின் கோபத்துக்கும் ஆளாகிவிட்டது திமுக- காங்கிரஸ் கூட்டணி.
**சிஎஸ்ஐ நாடார்களை வளைத்த அதிமுக**
தொகுதியில் கணிசமாக இருக்கும் கிறிஸ்துவ நாடார் வாக்குகளில் சிஎஸ்ஐ எனப்படும் கத்தோலிக்க கிறிஸ்துவ நாடார்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை விட்டு எங்கே போய்விடப் போகிறார்கள் என்ற மிதப்பில் இருந்துவிட்டது காங்கிரஸ். இத்தனைக்கும் திருநெல்வேலி திமுக எம்பி ஞான திரவியம் சி எஸ் ஐ பிரிவைச் சேர்ந்தவர்தான். அதேநேரம் கடைசி நேரத்தில் விஜிலா சத்யானந்தை களத்தில் இறக்கிய அதிமுக, ‘நாங்க பாஜகவுலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கிட்டுதானே இருக்கோம்’ என்றெல்லாம் பேசி கவனித்து கணிசமான சிஎஸ்ஐ கிறிஸ்துவர்கள் ஓட்டுகளை வளைத்திருக்கிறது.
திமுக காங்கிரஸ் கூட்டணியின் ஒருங்கிணைப்பின்மை, தேவேந்திர வேளாளர்களின் புறக்கணிப்பு, சிஎஸ் ஐ கிறிஸ்துவ சமூகத்தின் கடைசி நேர பங்களிப்பு ஆகியவை அதிமுகவை நல்ல லீடிங் கொண்டு வந்துவிட்டது.
�,”