சிறப்புத் தொடர்: வாடகைத் தாய்கள்: வலியும், வரலாறும்! பாகம் 1

Published On:

| By Balaji

தரணி தங்கவேலு

வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா (Surrogacy Regulation Bill) மீது தீவிரமான விமர்சனங்கள் எழுந்தன. பல சுற்று ஆலோசனைகளுக்குப் பின், மாநிலங்களவையின் தேர்வுக்குழு பரிந்துரைகளை மத்திய கேபினட் ஏற்றுக்கொண்டுள்ளது. நீண்ட காலமாகக் கிடப்பிலிருக்கும், இனப்பெருக்க உதவி தொடர்பான பல ஒழுங்குபடுத்துதல்கள் உள்ளடங்கிய இனப்பெருக்க உதவித் தொழில்நுட்ப மசோதாவுக்கும் (Assisted Reproduction Technology Bill) கேபினட்டின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்திய அரசு இனப்பெருக்க உதவி தொடர்பான சட்டங்களைக் கொண்டுவரும் இச்சூழலில், இந்தத் தொடர் கள நிலவரங்களை ஆராய்கிறது.

அது மதிய உணவு நேரம். மதியம் ஒரு மணிக்கு டிசம்பர் மாதத்தின் குளிர்கால சூரியன் இரக்கமின்றிச் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. நாங்கள் அமர்ந்துகொண்டிருந்த அகன்க்ஷா மருத்துவமனையின் அடித்தளத்தில் வெம்மையின் சுவடுகள் சற்றும் இல்லை. இந்த மருத்துவமனை குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் இருக்கிறது. இப்பகுதி குஜராத்தின் தலைநகரான அகமதாபாத்தில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அப்போதுதான் மதிய உணவை முடித்திருந்த பெண்கள் குழுக்களாக கேன்டீனின் வட்ட மேஜைகளில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். சோர்வுற்று இருந்த சிலர் குட்டித் தூக்கம் போடக் கிளம்ப மற்றவர்கள் தங்களுடைய மதிய பணிக்காகக் குழுவாக ஒன்றுகூட ஆரம்பித்திருந்தார்கள்.

அந்த அறையின் மையத்தில் ஒரு மேஜையைச் சுற்றி நெருக்கியடித்துக்கொண்டு குஜராத்தி, இந்தி மொழிகளில் உரையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் கதைகள் வண்ணமயமானவை. **அதிகாலை பிரார்த்தனை, தங்களின் குழந்தைகளின் நலன், மதிய சாப்பாட்டின் மெனு, அடுத்து தொடங்க இருக்கும் கைவினை வகுப்பு, உடல்நலம், பெண்மை, கருவுறுதலை கையாள்வது என்று பலவாறு கதைக்கிறார்கள்.** ஓரிரு வாரங்களுக்கு முன்புவரை யாரென்றே தெரியாத இப்பெண்கள், தங்களுக்கிடையே அவர்களுடைய தனிப்பட்ட, மனதுக்கு

நெருக்கமான கதைகளைப் பரிமாறிக் கொண்டனர்.

அவர்களுக்குள் எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் அத்தனை பேரின் வாழ்க்கையையும் கடன் தொல்லை பொதுவாகச் சூழ்ந்திருந்தது. இந்தப் பொதுப் பிரச்சினையை எதிர்கொள்ள அவர்கள் அனைவரும் பொதுத் தீர்வொன்றை கண்டடைந்து இருந்தார்கள்… வாடகைத் தாய் ஆவது.

**யார் வாடகைத் தாய்?**

இந்த மருத்துவமனையின் வாடகைத் தாய்களுக்கான விடுதியில் ஏறத்தாழ நூறு வாடகைத் தாய்மார்கள் வசிக்கிறார்கள். அவர்களில் 35 வயதாகும் தக்ஷாவும் ஒருவர். ஆறாண்டுகளுக்கு முன்னால், தக்ஷாவுக்கு 65,000 ரூபாய் கடன் இருந்தது. பக்கத்துக்கு வீட்டுக்காரர் வாடகைத் தாய் ஆக விருப்பமா என்று கேட்டார். அப்படி முதன்முறை அவர் வாடகைத் தாயானதற்குக் கிடைத்த கட்டணத்தில், தன்னுடைய கடன்களை அடைத்துவிட்டு வீட்டை கட்டினார். மேலும், சாலையோர உணவகம் ஒன்றையும் கணவரோடு இணைந்து தொடங்கினார். அந்த உணவகத்தில் இருந்து கிடைத்த வருமானம் குடும்பத்தையும், இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அவருடைய கணவர் விபத்தொன்றில் சிக்கிக்கொண்டார். **இது அவர்களுடைய வாழ்க்கையைப் பத்தாண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டது. எப்படி மீள்வது என்று பலவற்றை முயற்சி செய்து பார்த்துவிட்டு, மீண்டும் ஒரு முறை வாடகைத் தாய் ஆகலாம் என்கிற முடிவை தக்ஷா எடுத்தார். இப்போது அவர் ஆறு மாத கர்ப்பிணி.**

தங்களுடைய குடும்பத்தினரின் உடல்நலம், குழந்தைகளின் கல்வி, கடன் அடைப்பு ஆகிய பொருளாதாரத் தேவைகளுக்காக வாடகைத் தாயாக முடிவெடுத்ததாக நேர்முகம் புரிந்த பெண்கள் தெரிவித்தார்கள். இதில் பல பெண்களின் கணவர்கள் குடிநோயாளிகளாக இருந்ததால் எந்த வகையிலும் அவர்கள் உதவவில்லை என்று குற்றம் சாட்டினார்கள். சிலர் கணவனைப் பிரிந்திருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையால் தாங்கள் வாடகைத் தாய் ஆகிற சூழலுக்குத் தள்ளப்பட்டதாக இந்தப் பெண்கள் தெரிவித்தார்கள்.

தக்ஷாவின் கணவர் இரண்டாண்டுகளாகப் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவருக்குத் தருவதாகச் சொல்லப்பட்டு இருக்கும் நான்கு லட்சமும் அவருடைய கணவரின் சிகிச்சைக்கே போய்விடும்.

**“அவரோட நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருக்குன்னு டாக்டருங்க சொன்னாங்க. இப்படியே விட்டா தலை வரைக்கும் நோய் பரவி பெரிய தொல்லையாகிடுமாம். இந்தப் பணத்தை வெச்சு ஆபரேஷன் பண்ணி அவரை காப்பாத்தினது போக எதாச்சும் மிஞ்சினா மாசக்கணக்கா மூடியிருக்குற சாப்பாட்டுக் கடையைத் திறந்துடுவேன்”** என்று பள்ளிப்படிப்பு முடித்திருக்கும் தக்ஷா சொல்கிறார்.

கூட்டுறவு பால் நிறுவனமான அமுல் பெயரால் புகழ்பெற்ற ஆனந்த் மாவட்டம் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் மருத்துவர் நயனா படேல் இந்தப் பகுதியில் தொடங்கிய அகன்க்ஷா மருத்துவமனையால் ‘வாடகைத் தாய்மையின் தலைநகரம்’ ஆக உலகளவில் கவனம் ஈர்த்தது. நயனா ‘கருவுறுவதை வியாபாரமாக’ மாற்றியதற்காகச் சம அளவில் புகழவும், தூற்றவும் செய்கிறார்கள்.

**பெண் பாலினத்துக்கான வெளிகள்**

சமூகவியல் அறிஞர் அம்ரிதா பாண்டே தன்னுடைய ‘Wombs in Labour: Transnational Commercial Surrogacy in India’ நூலில் இத்தகைய வாடகைத் தாய்களுக்கான விடுதிகளை **“பெண் பாலினத்துக்கான வெளிகள்”** என்று அழைக்கிறார். இந்த விடுதி போன்ற வெளிகள் “மிகக்கடுமையாகப் பெண்களைக் கண்காணிக்கும் எண்ணத்தோடு அமைக்கப்பட்டிருந்தாலும், இந்தப் பெண்கள் கூட்டாக எதிர்ப்பை வெளிப்படுத்தும் களமாக அவை மாறுகின்றன” என்கிறார்.

அம்ரிதா. “சில பெண்கள் இந்த விடுதியை தகவல்கள் பரிமாறிக்கொள்ள, தங்களுடைய குறைகளைப் பகிர்ந்துகொள்ளப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். வேறு சிலருக்கு இது ஒரு கூட்டுச் செயல்பாடு தளமாக தங்கள் வருங்கால வேலைவாய்ப்புக்கான வழிமுறைகளைக் கண்டறியும் இடமாக அமைகிறது” என்று குறிப்பிடுகிறார்.

மருத்துவர் நயனாவும் வறுமையில் உழலும் பல பெண்களின் வாழ்க்கையைக் கைதூக்கிவிடும் செயலை தன்னுடைய மருத்துவமனை புரிவதாகக் கூறுகிறார். மேலும், அவர்களின் இடிந்துபோன வாழ்க்கையை மீட்டெடுக்கத் தாங்கள் நடத்தும் வாழ்க்கைத்திறன் பயிற்சிகள் உதவுகின்றன என்றும் கூறுகிறார்.

**“அவர்கள் இங்கே வெறுங்கையோடு வருகிறார்கள். நாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் அமைப்புச் சூழலானது முக்கியமானது. இது சிலரை வீடு கட்ட உதவுகிறது. இன்னும் சிலரால் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க இயல்கிறது. மொத்தமாக இந்தப் பெண்களின் வாழ்க்கையை வளப்படுத்துகிறது. அது நிச்சயமாக அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் அனுபவம்”** என்று மருத்துவர் நயனா கருதுகிறார்.

வாடகைத் தாய்மையின் பெயரால் இழப்பீடு மறுக்கப்படும் நிலை

**வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா – 2019**

வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா – 2019, பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. இதனையடுத்து “நெருங்கிய உறவினர்கள்” மட்டுமே வாடகைத் தாயாக இருக்க முடியும் என்கிற வரிக்குப் பதிலாக** “விருப்பமுள்ள எந்தப் பெண்ணும் வாடகைத் தாயாக அனுமதியளிக்க வேண்டும்”** என்பன போன்ற மாநிலங்களவை தேர்வுக்குழுவின் பிற பரிந்துரைகளையும் ஏற்பதாக மத்திய அரசு பிப்ரவரி மாதம் ஒப்புக்கொண்டது.

வாடகைத் தாய்மையை வர்த்தகமாக நடத்த தடை விதிக்கும் இம்மசோதா வாடகைத் தாய்மை முறை பலன் எதிர்பாராத ஒன்றாக இருக்க வேண்டும் என்கிறது. இதனால் கள்ளச் சந்தை ஒன்று எழுவதற்கான வாய்ப்புகள் குறித்தும், வாடகைத் தாய்மார்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றியும் வினாக்கள் எழாமல் இல்லை

.

**இந்த மசோதா, “…நாட்டில் உள்ள வாடகைத் தாய் சேவைகளை முறைப்படுத்தவும், வாடகைத் தாய்களைச் சுரண்டுவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கவும், வாடகைத் தாய் முறையில் பிறந்த குழந்தைகளின் உரிமைகளைக் காப்பதற்காகவும் சட்டமியற்றுவது

அவசியமாகிறது” என்கிறது.**

இந்தச் சட்ட மசோதா குறித்து நிகழ்ந்த விவாதங்கள் இரண்டே விஷயங்களைச் சுற்றி சுழன்றன… வாடகைத் தாய் முறையினால் தங்களுடைய பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றி, வாழ்க்கையில் முன்னேறிய பெண்கள். பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுச் சுரண்டலுக்கு ஆளாகும் வாடகைத் தாய்கள்.

புதுடெல்லியில் இயங்கிவரும் சமூக வளர்ச்சிக்கான மன்றத்தை (Council for Social Development) சேர்ந்த PM ஆரதி, ‘இந்தியாவில் நிலவி வரும் வேலை வாய்ப்பின்மை, தரப்படும் குறைவான கூலி ஆகியவற்றைச் சீர்செய்யாமல், வர்த்தக வாடகைத் தாய் முறையை முற்றிலும் தடை செய்வது தீர்வும் அல்ல’ என்று வேறொரு பார்வையை முன்வைக்கிறார். அவருடைய சமீபத்திய ‘Silent Voices: A Critical Analysis of Surrogacy’s Legal Journey in India’ என்கிற ஆய்வுத்தாளில் வாடகைத் தாய் முறையை நெறிப்படுத்த முனையும் சட்டப் பயணம் குறித்துக் கூறுகையில், “அரசாங்கம் அனைவருக்கும் ஆரம்ப, மேல்நிலை, உயர்நிலைக் கல்வி வழங்குவது, அனைவருக்கும் மேம்பட்ட வசிப்பிடங்களைக் கட்டித்தருவது, நிலப் பகிர்வு, அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு முதலிய பொறுப்புகளை எல்லாம் கைகழுவிவிட்டு வாடகைத் தாய் முறையை மட்டும் தடை செய்வது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்” என்கிறார்.

புதுடெல்லியைச் சேர்ந்த கருத்தரிப்பு நிபுணரா ரிதா பக்ஷி, வாடகைத் தாய்மார்களின் பாதுகாப்புக்கு, ‘கருவில் குழந்தையைச் சுமப்பதற்கு என்று குறைந்தபட்ச பணத்தை அவர்களுக்கு என்று ஒதுக்க வேண்டும். இப்படி நிகழ்ந்திருந்தால் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதோடு, சமமான ஊதியத்துக்கும் வழிகோலி இருக்கும்” என்கிறார்.

மும்பையைச் சேர்ந்த மூத்த மகப்பேறு மருத்துவர் நிகில் தத்தார், “அறிவியலில் அதுவும் குறிப்பாக மருத்துவத்தில் எந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், அவை பல்வேறு வகையான வாய்ப்புகளை உருவாக்கித் தரும். இவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதும் நிகழ்கிறது” என்று வாதிடுகிறார். மேலும், ஒட்டுமொத்தமாக வாடகைத் தாய் முறையைத் தடை செய்வதைவிட, அதனை முறைப்படுத்துவதே சரியான அணுகுமுறை என்கிறார்.

“அரசாங்க அமைப்புகள் உயிரியல், அறம், சட்டம் என்று பல்வேறு தளங்களில் எழும் பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு சமூகச் சமநிலை சிதையாத வண்ணம் நெறிமுறைப்படுத்த முனைய வேண்டும். இது இன்றியமையாத ஒன்று. அதே வேளையில், முறைப்படுத்துதல் என்பதும், மருத்துவ வளர்ச்சி ஒன்றைத் தடுப்பதும் ஒன்றாகாது” என்று கருதுகிறார்.

பலன் எதிர்பாராத வாடகைத் தாய் முறை இழப்பீடு இன்றி நிகழ வேண்டும் என்று முன்னெடுக்கப்படும் முயற்சிகளின் விளைவைப் பற்றிக் கூறுகையில், “கறுப்புச் சந்தையை உருவாக்குவது ஒருபுறம் இருக்கட்டும், இத்தகைய சட்டங்கள் வாடகைத் தாய் முறையையே மொத்தமாக ஒழித்துக் கட்டிவிடக் கூடும். இது ஒரு பெண்ணுக்குரிய இனப்பெருக்க உரிமைகளை மறுப்பதில் போய் முடியும். இதுவே முதன்மையான பிரச்சினையாகும்.”

எப்படி இந்த சட்ட மசோதா இயற்றப்பட்டது?

**(நாளை தொடரும்)**

**கட்டுரையாளர் குறிப்பு**

**தரணி தங்கவேலு**

இந்தச் செய்திக்கட்டுரை தாக்கூர் அறக்கட்டளையின் நிதியுதவியோடு எழுதப்பட்டது. தற்சார்புள்ள இதழியலாளரான தரணி தங்கவேலு, பொதுச் சுகாதாரம் சார்ந்த புலனாய்வு இதழியலுக்கான தாக்கூர் அறக்கட்டளையின் நல்கையினை 2019இல் பெற்றவர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share