உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற மாரியப்பன்

Published On:

| By Balaji

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்திய வீர, வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி தொடர்ச்சியாக பதக்கங்களை வென்று மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதுவரை இந்தியாவுக்கு 8 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், இன்று(ஆகஸ்ட் 31) இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உட்பட, மூவர் கலந்துகொண்டனர். டி-42 பிரிவில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார் மாரியப்பன் தங்கவேலு. இந்தியாவின் மற்றொரு வீரர் சரத்குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் பதக்கத்தை வென்றார். அமெரிக்க வீரர் கிரீவ் சாம் தங்கம் வென்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் பெற்ற மாரியப்பன் தங்கவேலு இந்த முறையும் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளி வென்றுள்ளார்.

இதுவரை பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் 10 பதக்கங்களை வென்றுள்ளனர். அதில், 2 தங்கம் , 5 வெள்ளி , 3 வெண்கலம்.

உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர், குடியரசு தலைவர் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில்,” பாரா ஒலிம்பிக்கில் மேன்மேலும் உயர்ந்து கொண்டிருக்கிறோம். மாரியப்பன் தங்கவேலு சாதனையை எண்ணி இந்தியா பெருமை கொள்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருவதை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து இரண்டாவது முறையாக உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற நட்சத்திர வீரர் மாரியப்பன் தங்கவேலு, வெண்கலம் வென்ற சரத்குமார் மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற சிங்ராஜ் அதானா ஆகிய மூவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாரியப்பன் தாயார் சரோஜா கூறுகையில், “ மாரியப்பன் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்திருந்தேன். இருந்தாலும் வெள்ளி வென்றதும் எனக்கு மகிழ்ச்சிதான். நாட்டிற்காக மீண்டும் ஒருமுறை தன்னுடைய மகன் பதக்கம் வென்றது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது” என்று கூறினார்.

மாரியப்பனின் வெற்றியை அவரது ஊரான பெரியவடக்கம்பட்டி கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share