பணப்பற்றாக்குறையில் உள்ள பாகிஸ்தான் நிதிச் சரிவைத் தடுக்க அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சொகுசு வாகனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பிரதமர் தடை விதித்து அதற்கான உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் புதன்கிழமை தோஹாவில் 6 பில்லியன் டாலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தை புதுமைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் மீதான தடைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.
வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், தனது கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய பின்னர், நலிவடைந்த பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் கடுமையான முடிவுகளை எடுக்கும் என்று பிரதமர் ஷேபாஸ் முடிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் மத்திய வங்கியின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த வாரம் மேலும் 190 மில்லியன் டாலர் குறைந்து 10.31 பில்லியன் டாலராக உள்ளது. பாகிஸ்தானில் டாலர் மதிப்பு உயர்ந்து வருவதால், இரண்டாவது சுற்று பணவீக்க தாக்கத்தை ஏற்படுத்தி நடுத்தர வர்க்கங்களை கடுமையாக பாதிக்கும் என்று கணிக்கப்படுகிறது.
ரூபாயின் மதிப்பிழப்பால் பொருளாதாரத்தின் எந்தத் துறையும் வீழ்ச்சியிலிருந்து விடுபடாது, கடன் சேவை மற்றும் தொழில் மற்றும் உணவுப் பொருட்களுக்கான இறக்குமதி போன்ற முக்கிய துறைகள் முதலில் பாதிக்கப்படும். அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள், ஏற்கனவே எண்ணெய் இறக்குமதி கட்டணங்களை இரட்டிப்பாக்கியுள்ளன. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில், இறக்குமதி 72 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
.