செல்போன் செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உலக அளவில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. இன்டர்நெட் உலகில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரிப்பால், மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரையில் ஷாப்பிங் மால்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரையில், போன்பே, கூகுள் பே, பேடிஎம் என பணமில்லா பரிவர்த்தனை அதிகமாகியிருக்கிறது.
இந்தியாவில் அனைத்து வகையான பணப் பரிவர்த்தனை முறைகளையும் ஒருங்கிணைக்க ரிசர்வ் வங்கி மேற்கொண்ட முயற்சியின் பயனாக 2016ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது தான் யுபிஐ (UPI). அறிமுகமான ஒரு சில நாட்களிலேயே மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. 2016 ஆம் ஆண்டு யுபிஐ மூலம் 893 கோடி ரூபாய்க்கு பணப்பரிவர்த்தனை நடைபெற்ற நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு 71 லட்சத்து 46 ஆயிரத்து 848 ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் கூறிய பிரதமர் மோடி, நடப்பு ஆண்டில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாகவும், சிறிய உணவகங்கள், பழக்கடைகளில் கூட யுபிஐ பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
சமீபத்திய ஆய்வின்படி, சீனா, தென் கொரியா, தாய்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உலக அளவில் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் நூறு சதவீதம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை சாத்தியப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி மீதான நம்பகத்தன்மை அடித்தளமிட்டிருப்பதாக வங்கி ஊழியர் கூட்டமைப்பை சேர்ந்த ராஜகோபால் தெரிவித்தார்.
.