அணிசேரா நாடுகள் அமைப்பின் மாநாட்டை மீண்டும் புறக்கணித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
ஜவகர்லால் நேரு காலத்தில் உலக அளவில் 120 நாடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அணிசேரா நாடுகள் அமைப்பில் இந்தியா மிக முக்கிய பங்கு வகித்து வந்தது. இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு வெனிசுலா நாட்டில் நடைபெற்ற அணிசேரா நாடுகள் அமைப்பின் 17 ஆவது மாநாட்டில் அப்போதைய பிரதமர் மோடி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இப்போது அணிசேரா நாடுகள் அமைப்பின் 18 ஆவது மாநாடு அசர்பைஜான் நாட்டில் வரும் 25, 26 தேதிகளில் நடக்க இருக்கிறது.
இந்த அணிசேரா நாடுகள் அமைப்பின் மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை என்பது நேற்று உறுதியாகியிருக்கிறது.
இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையிலான குழுவினர் கலந்து கொள்வார்கள் என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது 2016ஆம் ஆண்டு அணிசேரா நாடுகள் அமைப்பின் மாநாடு நடந்தபோது பிரதமர் மோடி அப்போதைய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியை இந்திய பிரதிநிதியாக அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அணிசேரா நாடுகள் அமைப்பின் நிறுவன உறுப்பினராக இந்தியா இருந்து வருகிறது.
இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டு வரும் மாற்றமாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.�,