குடும்ப சண்டை வழக்கைக் காரணம் காட்டி போலீஸ் வேலை வழங்க மறுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சினேகா என்ற இளம்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து மற்றும் உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்றதாகவும், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணியில் சேர இருந்த தறுவாயில் தன் மீது கடந்த 2016ஆம் ஆண்டு பதியப்பட்ட குற்ற வழக்கைக் காரணம் காட்டி எனக்கு போலீஸ் வேலை வழங்க முடியாது என நாகப்பட்டினம் எஸ்பி உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு எனது தாய், சகோதரி மற்றும் நாத்தனார் ஆகியோருக்கிடையே நடைபெற்ற மாமியார், மருமகள் குடும்ப சண்டையில் அப்போது மைனராக இருந்த எனது பெயரையும் குற்ற வழக்கில் போலீஸார் சேர்த்து விட்டதாகவும், பின்னர் சமரசம் ஏற்பட்ட நிலையில் தனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், “குடும்பத்துக்குள் மாமியார், மருமகள் மற்றும் நாத்தனார் இடையே நடைபெறும் குடும்ப சண்டை என்பது ஒரு சாதாரண நிகழ்வு தான். இதை ஒரு பெரிய குற்ற நிகழ்வாகக் கருத வேண்டியது இல்லை. மேலும் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டபோது மனுதாரர் மைனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போலீஸ் வேலையில் சேர சினேகாவுக்கு எல்லா தகுதிகளும் இருக்கும்போது சாதாரண வழக்கைக் காரணம் காட்டி பணி வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல. எனவே மனுதாரர் எல்லா தகுதிகளையும் கொண்டிருக்கும் பட்சத்தில் 4 வாரங்களில் உரிய போலீஸ் வேலை வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.
**-பிரியா**�,