�
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தன்னுடைய வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் காற்று மாசுபாட்டினை குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசமாக உள்ளது. தனிநபர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
வாரத்தில் புதன்கிழமை மட்டும் அரசு அதிகாரிகள் பொதுப் போக்குவரத்து அல்லது சைக்கிள் அல்லது நடந்தோ அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி சென்னை மாவட்ட ஆட்சியர் விஜய ராணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசுத் துறை அலுவலகங்களுக்கு வருகை தரும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் புதன்கிழமை ஒருநாள் மட்டும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை பொது போக்குவரத்தில் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகப்பட்டினம் ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று(டிசம்பர் 8) காடம்பாடியில் உள்ள தனது வீட்டிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்றார். ஆட்சியருடன் சக அதிகாரிகளும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
**-வினிதா**
�,