7.5% உள் ஒதுக்கீடு: நடப்பாண்டிலேயே வழங்க வாய்ப்புள்ளதா?

Published On:

| By Balaji

மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி என இளங்கலை மருத்துவ படிப்புகளில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் வகையில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக அரசுக்குப் பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் அமைக்கப்பட்டது. சுகாதாரத் துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், சட்டத்துறை செயலாளர் உள்ளிட்ட 6 பேர் உறுப்பினர்களாகக் கொண்ட இந்த குழுவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிப்பது குறித்து ஆலோசனை செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்த தமிழக அரசு, இந்த மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகவுள்ளன. எனவே, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவின் பரிந்துரையை அமல்படுத்திய பிறகு நீட் தேர்வு முடிவை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இதனை அவசர வழக்காக நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு எடுத்துக்கொண்டது. இவ்வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தபோது, அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வை எழுதும் மாணவர்களுக்கான 7.5 உள் ஒதுக்கீடு குறித்த சட்ட மசோதா எப்போது நிறைவேற்றப்பட்டது? ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் அலுவலகத்தில் இதன் நிலை என்ன? தமிழகத்தில் இந்த வருடம் எத்தனை மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். இதில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

இதற்கு அரசு தரப்பில், கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதினர். நீட் தேர்வு அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக அரசுப் பள்ளி மாணவர்களில் ஒரு சதவிகிதம் பேர் மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர். ஆனால், நீட் தேர்வு அமலுக்கு வந்த பின்னர், அந்த எண்ணிக்கையும் 0.1 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. 2018ல் 5, 2019ல் 6 என இரண்டு ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் 11 பேருக்கு மட்டுமே மருத்துவ சீட் கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அரசியல் கட்சியினர் இவ்விவகாரத்தில் ஒன்றுபட்டுள்ளனர். நாளை நீட் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது. அதனால் இவ்விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக ஆளுநரின் தனி செயலாளர் இன்று(நேற்று -அக்டோபர் 14) பிற்பகல் இவ்வழக்கு தொடர்பாகப் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

வழக்கு மற்றும் அதன் மீதான உத்தரவை ஆளுநரின் தனி செயலாளருக்கு உடனடியாக இ மெயில் அல்லது வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

வழக்கு மீண்டும் நேற்று மாலை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, தமிழக அரசின் அவசரச் சட்டம் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதால் முடிவெடுக்க இரண்டு வாரக் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து நீதிபதிகள் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதியே, 7.5 உள் ஒதுக்கீடு மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒரு மாதமாகியும் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை. மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு விரைவில் முடிவெடுக்க வேண்டும். விரைவில் நீட் முடிவு வெளியாக உள்ள நிலையில் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படாதது அரசு பள்ளி மாணவர்களைப் பாதிக்காதா? என்று கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் மொத்த மாணவர்களில் 41 சதவிகிதம் பேர் அரசுப் பள்ளி மாணவர்கள். ஆனால் அவர்களுக்கு ஒற்றை இலக்கத்தில்தான் மருத்துவ இடங்கள் கிடைக்கின்றன. எனவே இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்க வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் 2 வாரம் கால அவகாசம் வழங்கினால் அதற்குள் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதன் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுவிடும் என்பதால், உள் ஒதுக்கீடு தொடர்பான இறுதி முடிவை எடுக்கத் தாமதம் செய்வதை ஏற்க முடியாது. இவ்விவகாரம் குறித்து ஆளுநரின் தனி செயலாளரிடம் விளக்கம் கேட்டு நாளை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கையும் ஒத்திவைத்தனர்.

இதனிடையே நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share