பதினோராம், பன்னிரண்டாம் வகுப்புகளில் 60 மாணவ மாணவியருக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழகப் பள்ளிக்கல்வித் துறை.
புதிய பாடத்திட்டங்கள், செயல் வழிக் கல்வி முறை, ஆசிரியர் அணுகுமுறைகளில் மாற்றம், மாணவ மாணவியர் மனநலம் பேணுதல் உள்ளிட்ட பல விஷயங்களில் அக்கறை காட்டிப் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது தமிழகப் பள்ளிக்கல்வித் துறை. தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும், கடந்த 3ஆம் தேதி முதல் இந்த கல்வியாண்டுக்கான பணிக்காலம் தொடங்கியது.
இந்த நிலையில், இன்று (ஜூன் 13) அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது தமிழகப் பள்ளிக்கல்வித் துறை. அதில், பதினோராம், பன்னிரண்டாம் வகுப்புகளில் 60 மாணவ மாணவியருக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 40 பேருக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது.
1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளில் 30 பேருக்கு ஒரு ஆசிரியர், 6 முதல் 8 வரையிலான நடுநிலைப் பள்ளிகளில் 35 பேருக்கு ஒரு ஆசிரியர், 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் 40 பேருக்கு ஒரு ஆசிரியர் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
பள்ளிக்கல்வித் துறையின் புதிய அறிவிப்புக்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது கற்பித்தல் முறையைக் கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன்.
“ஒரு வகுப்பறையில் 60 மாணவர்கள் என்பது இட நெருக்கடி மட்டுமல்ல; அதனால், மாணவர்களுக்கு ஆரோக்கியமான சூழல் இல்லாமல் ஒருவிதமான இறுக்கம் ஏற்படும். பாடத்திட்டத்தைச் சிறப்பாக அமைத்துவிட்டு, அதனை எடுத்துச்செல்லும் வழி சரியாக அமையாவிட்டால் பயனற்றுப் போகும். போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, பாடங்களை எளிமையாக எடுத்துச் செல்ல மாணவர்கள் ஆசிரியர் விகிதம் குறைவாக இருந்தால் மட்டுமே சிறப்பு” என்று அவர் கூறியுள்ளார்.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் விகிதாச்சாரத்தைத் தமிழக அரசு குறைக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**
**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[அதிமுகவின் கொங்கு கோட்டை உடைந்தது: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/13/17)**
�,”