படத்துக்கான வெளியீட்டுத் தேதி நெருங்கிவரும் நிலையில், தமது படம் குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளது 2.O படத்தைத் தயாரிக்கும் லைகா.
பிரமாண்டமாக உருவாகிவரும் ரஜினியின் 2.O படம், நவம்பர் 29ஆம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது. இதையொட்டி பலவிதமாக புரொமோக்களை வெளியிட்டுவருகிறது படக்குழு. எந்திரனிலேயே ரஜினியின் தோற்றம், கதையின் கரு போன்றவற்றை பெரும்பாலான ரசிகர்கள் பார்த்துவிட்டதால் 2.Oக்கான புரொமோக்களை ஆர்வத்துடன் கண்டுகளிப்போரின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்பட ட்ரெய்லர் பெரிய அளவிலான கவனத்தைக் குவிக்கவில்லையென்பதே இதற்கு சாட்சி.
ஆனாலும் ரஜினி, அக்ஷய் எனும் இரண்டு பெரிய நட்சத்திரங்களுடன் இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநரான ஷங்கரும் இதில் உள்ளதால் இந்தப் படத்துக்கு மினிமம் கியாரண்டி ரசிகர்கள் இயல்பாகவே உண்டு. ஆனால், மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெறுமா எனும் விஷயத்தைப் படத்தின் கதையும், சூழலும்தான் தீர்மானிக்கும்.
இந்தப் படம் பல கோடி ரூபாய் செலவில், பிரமாண்டமாகத் தயாராகி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதால் இந்தப் படத் திரையரங்க உரிமத்தை வாங்கி ஏரியா வாரியாக விநியோகம் செய்யவுள்ளவர்கள் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வமும் கோலிவுட்டில் இருந்துவந்தது. இந்த நிலையில் கேரளா, மதுரை, ராமநாதபுரம் ஆகிய ஏரியாக்களில் இந்தப் படத்தை விநியோகம் செய்யவுள்ளவர்கள் குறித்த விவரத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது லைகா.
அதன்படி,கேரளாவில் முலகுப்படம் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனம் இந்தப் பட உரிமத்தைக் கைப்பற்றியுள்ளது. அஜித் நடித்த விவேகம் படத்தையும் இந்த நிறுவனம்தான் பெரும் விலை கொடுத்து வாங்கியிருந்தது எனும் விஷயம் குறிப்பிடத்தக்கது. அதுபோல மதுரை மற்றும் ராமநாதபுரம் ஏரியா திரையரங்க உரிமத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.�,