ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உள்ளிட்ட ஆதரவுகளை வழங்க வேண்டியது அவசியம் என்று மும்பை பங்குச் சந்தை நிர்வாக இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூருவில் ஜூலை 11ஆம் தேதி மும்பை பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயலதிகாரியுமான ஆஷிஸ் குமார் சவுகான், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் நிதி திரட்டுவது மிகவும் கடினமான ஒன்றுதான் என்பது தெரியும். ஆனால், அவற்றில் சில நிறுவனங்கள் எதிர்காலத்தில் ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் போன்று மாபெரும் நிறுவனங்களாக உருவெடுக்கும் திறனைப் பெற்றிருக்கும். இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் துவக்கத்தில் சிறிய நிறுவனங்களாகவே தொடங்கப்பட்டவை என்பதை யாரும் மறக்க முடியாது.
இந்தியாவில் சுமார் 1 லட்சம் ஸ்டார்ட் அப் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதில் 75 சதவிகித நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வந்தாலே அது பெரிய விஷயம்தான். இந்நிறுவனங்களால் எதிர்காலத்தில் இந்தியாவில் அதிக சொத்துகளை உருவாக்க முடியும். மும்பை பங்குச் சந்தையின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான இணையதளத்தில் மொத்தம் 253 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு ரூ.22,000 கோடியாகும். இந்நிறுவனங்கள் முதன்முதலில் 2014ஆம் ஆண்டில் பதிவுசெய்யத் தொடங்கியபோது அவற்றின் சந்தை மதிப்பு ரூ.8,000 கோடியாக மட்டுமே இருந்தது. எனவே, இந்நிறுவனங்கள் சிறந்த தொழில் வளர்ச்சியைக் கொண்டுள்ளன” என்றார்.�,