nவிடுமுறையிலும் வேலை: இந்தியர்களின் நிலை!

Published On:

| By Balaji

விடுமுறைக் காலங்களைக் கழிக்காமல் வேலைபார்க்கும் மக்கள் அதிகம் வசிக்கும் நாடாக இந்தியா உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.

இதுகுறித்து *எக்ஸ்பீடியா* என்ற பயண ஏஜென்சி நிறுவனம் ஆய்வு ஒன்று நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் வழியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வானது வட அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் ஆசிய பசிபிக் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 19 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 19 முதல் 28 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 11,000 பேரிடம் வாழ்க்கை – பணி நிலைகளின் சமநிலை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

’Expedia Vacation Deprivation Report- 2018’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், ’விடுமுறைக் காலங்களிலும் வேலைக்குச் செல்லவிருப்பதாக அதிகளவில் இந்தியர்கள் கூறுகின்றனர். 41 விழுக்காடு இந்தியர்கள் கடந்த 6 மாதங்களில் விடுமுறைக் காலங்களைக் கழிக்காமல் வேலை பார்த்து வருவதாகக் கூறுகின்றனர். தொழில்முறைக் காரணங்களும், நீண்ட விடுப்புக்காக விடுமுறைகளைச் சேர்த்து வைப்பதும்தான் அவர்கள் விடுமுறை எடுக்காததற்கான காரணமாக உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் விடுமுறைக் காலங்கள் குறைந்து வேலை செய்யும் காலம் அதிகரித்து வருவதாகவும் பணியாளர்கள் இந்த ஆய்வில் கூறியுள்ளனர். அதிகபட்சமாக இந்தியாவில் 75 விழுக்காட்டினரும், தென் கொரியாவில் 72 விழுக்காட்டினரும், ஹாங்காங்கில் 69 விழுக்காட்டினரும் இவ்வாறு கூறியுள்ளனர். எக்ஸ்பீடியா இந்தியா நிறுவனத்தின் தலைவர் மன்மீத் அலுவாலியா இதுகுறித்து *டி.என்.என்.* ஊடகத்திடம் பேசுகையில், “விடுமுறை எடுப்பதற்கு இந்திய முதலாளிகளிடம் ஆதரவு அதிகரித்திருப்பதை எங்களால் காண முடிகிறது. ஆனாலும் ஊழியர்கள் தங்களது பணிகளுக்காக விடுமுறைகளை முழுமையாக எடுக்காமல் உள்ளனர்.

விடுமுறைக் காலங்களில் பணிக்குச் செல்வதை 18 விழுக்காட்டினர் விரும்புகின்றனர். கடந்த ஒரு ஆண்டில் 17 விழுக்காட்டினர் எந்த விடுமுறையையும் எடுக்கவில்லை. 34 விழுக்காடு இந்தியர்கள் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது தங்களது மின்னஞ்சல்களைப் பார்க்கின்றனர். 64 விழுக்காட்டினருக்கு நீண்ட விடுப்பில் சென்றாலும்கூட ஏதேனும் பணிகள் இருக்கத்தான் செய்கிறது” என்றார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share