விஜய்யின் சர்கார் படப் படப்பிடிப்புகள் தற்போது முற்றிலுமாக நிறைவடைந்துள்ளன.
துப்பாக்கி, கத்தி பட வெற்றிகளைத் தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் காம்போவில் உருவாகிவரும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னதாக வெளியானது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் அதிகாரபூர்வமாகவே தொடர்ந்து வெளியிட்டுவந்தது படக்குழு.
சில தினங்களுக்கு முன்பு படத்தில் விஜய் நடிக்கவுள்ள காட்சிக்கான படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவுற்றதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்புமே தற்போது நிறைவுற்றுள்ளது. இதை இந்தப் படத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாரே ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளார். இதுபற்றி பகிர்ந்துள்ள அவர் படப்பிடிப்பு முடிந்து படப்பிடிப்புத் தளத்தில் படக்குழு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா துறையினர் சில மாதங்களுக்கு முன்னதாக நடத்திய வேலைநிறுத்தத்தின்போது பல படங்கள் தங்களின் படப்பிடிப்புகளை நிறுத்திக்கொண்டனர். ஆனால், சர்கார் படக்குழு உள்ளிட்ட சில படக்குழுக்கள் சிறப்பு அனுமதி வாங்கி தொடர்ந்து படம் தொடர்பான வேலைகளில் இயங்கியே வந்தனர். அதனாலேயே இந்தப் படப்பிடிப்பு நிறைவானது விரைவில் சாத்தியமாகியுள்ளது எனலாம். இல்லையென்றால் இன்னும்கூட நாட்கள் தள்ளிப்போயிருக்க வாய்ப்பு உண்டு.
விஜய்யுடன் மீண்டும் இந்தப் படத்தின் வாயிலாக ஜோடி சேர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.�,”