nமேட்டுப்பாளையம்: சாலைப் பணிகள் தொடக்கம்!

Published On:

| By Balaji

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நான்கு வழிச் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கியுள்ளன.

NH67 மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கம் பாளையத்திலிருந்து மதம்பாளையம் வரையிலான சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் ஒப்பந்தம் சென்ற ஆண்டின் ஏப்ரல் மாதம் போடப்பட்டது. சாலையின் இருபக்கமும் இருந்த மரங்களை அகற்றுவது சிரமமாக இருந்ததால் சாலை விரிவாக்கப் பணி தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மரங்களை அகற்றும் பணி நிறைவுற்றுள்ளதால் சாலை விரிவாக்கப் பணி தற்போது தொடங்கியுள்ளது. 6.1 கிலோ மீட்டர் நீளமுடைய இச்சாலைக்கான விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

அந்த அதிகாரி மேலும் கூறுகையில், “புதிதாக விரிவாக்கம் செய்யப்படும் சாலையில் நான்கு பாலங்களும் ஐந்து மதகுகளும் அமைக்கப்படவுள்ளது. இதில் இரண்டு பாலங்களை மறுவடிவமைப்பு செய்யவுள்ளோம். பெரியநாயக்கம் பாளையத்திலிருந்து சாமிசெட்டி பாளையம் வரையிலான சாலையில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா தொழில் துறை பயிற்சி மையத்துக்கு அருகில் மேம்பாலம் ஒன்றும் அமைக்கப்படுகிறது. இதற்கான பணி தனி டெண்டரில் நடைபெறுகிறது. ஆறு மாதங்களுக்குள் சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்துவிடும். இத்திட்டத்துக்கு மொத்தம் ரூ.33 கோடி வரையில் செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share