மக்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்துவருகிறது. இதில் முதல் 3 கட்ட தேர்தல் முடிவடைந்தநிலையில் 4-வது கட்ட தேர்தல் வருகிற வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், ஓராய் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியபோது கூறியதாவது: கடந்த முறை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நான் யாத்திரை மேற்கொண்டபோது இப் பகுதிக்கு வந்தேன். எங்கள் கட்சியை ஆசீர்வாதம் செய்வதற்கு, நீங்கள் அதிகளவில் இங்கு வருகைபுரிந்துள்ளீர்கள். அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறது? யார் அமைச்சராக பதவிக்கு வரப்போகிறார்கள்? என்பதற்காக மட்டும் இந்தத் தேர்தல் நடைபெறவில்லை. அதைவிடவும் இந்தத் தேர்தல் மிகப்பெரியது.
உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சி கந்தல் துணிபோல உள்ளது. குறிப்பாக, பந்தல்கண்ட் பகுதியில் வளர்ச்சி நிலை மிக மோசமாக உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் வேறு யாராவது ஆட்சிக்கு வந்தால் உங்களை அவர்கள் அழித்துவிடுவார்கள். சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி போன்ற கட்சிகள் ஒரு நாணயத்தின் பல்வேறு பக்கங்கள் போன்றவர்கள். மற்ற கட்சிகள் சொல்வதையோ, நாங்கள் சொல்வதையோ நீங்கள் கேட்க வேண்டாம். உங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள்.
உத்தரப்பிரதேசத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பந்தல்கண்ட் பகுதிக்கு தனிக்கவனம் செலுத்தி, அப்பகுதி பிரச்னைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும். 5௦௦,1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என நான் அறிவித்தபோது, மாயாவதி எந்த ஒரு திட்டமிடலும் இன்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட சில தினங்களில் அவர் 1௦௦ கோடி ரூபாயை வங்கியில் செலுத்தியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தற்போது பேகன்ஜி (மாயாவதி) சமாஜ் கட்சி ஆகிவிட்டது என்று அவர் கூறினார்.�,