nபைரஸி: கண்டுகொள்ளாத தயாரிப்பாளர் சங்கம்!

Published On:

| By Balaji

தமிழ்த் திரையுலகில் புதிய படங்கள் வெளியாகும் போது திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து சி.டி தயார் செய்து பைரஸி மாபியாக்கள் கல்லா கட்டுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்செயலுக்கு சில திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்து உடந்தையாக இருப்பதாகத் தயாரிப்பாளர்களால் குற்றம் கூறப்பட்டது. தமிழகத்தில் இக்குற்றச்சாட்டுக்கு உள்ளான பத்து திரையரங்குகளுக்கு புதிய படங்களைத் திரையிட வழங்கக் கூடாது என்று மனுஷனா நீ, குப்பைக்கதை படங்களின் தயாரிப்பாளர்கள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

சங்கத் தலைவர் விஷால், தான் நடித்த சண்டக்கோழி 2 படத்தை குற்றச்சாட்டுக்குள்ளான தியேட்டர்களுக்கு வழங்க மாட்டேன் என்று அதிரடியாக அறிவித்திருந்தார். திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் விஷால் முடிவை உடனடியாக கைவிடவில்லை என்றால் சண்டக்கோழி 2 படத்தை தமிழகம் முழுவதும் திரையிட மாட்டோம் என அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது பட வெளியீட்டில் சிக்கல் வருவதை விரும்பாத விஷால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் கருத்தை கேட்காமல், இனி வரும் காலங்களில் தியேட்டர்களில் கண்காணிப்பு பலப்படுத்தத் தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது ஒவ்வொரு காட்சியின் போதும் அரங்குக்குள் இருவர் சென்று கண்காணிப்பார்கள் என்று விஷால் அறிவித்தார்.

அத்துடன் அனைத்துத் தியேட்டரிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்; இதனைக் கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது எனக் கூறிய விஷால் குற்றச்சாட்டுக்குள்ளான தியேட்டர் மீது என்ன நடவடிக்கை என்பதைக் கூறவே இல்லை.

சங்கத்தை நம்பி பயன் இல்லை என கருதிய ராஜா ரங்குஸ்கி தயாரிப்பாளர் சக்தி வாசன், தனது படத்தை திருட்டுத்தனமாக பதிவு செய்யக் காரணமாக இருந்த கரூர் கவிதாலயா தியேட்டர் உரிமையாளர் மீது மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் உரிய ஆவணங்களுடன் வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கு நவம்பர் இறுதியில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.

இதற்கிடையில் திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. அதன் படி கரூர் கவிதாலயா தியேட்டர் உரிமையார் மீது மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சக்தி வாசன் தொடர்ந்துள்ள வழக்கின் அடிப்படையில் அவரை கைதுசெய்ய கூடாது என கூறியுள்ளது.

இது சம்பந்தமாக ராஜா ரங்குஸ்கி தயாரிப்பாளர் சக்தி வாசன் கூறியதாவது; “குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் திரையரங்கு உரிமையாளரைப் பாதுகாக்க அவர் சார்ந்துள்ள சங்கம் வழக்கு தொடுக்கிறது, அதற்காகப் போராடுகிறது, படங்களைத் திரையிட மாட்டோம் என மிரட்டுகின்றனர். கோடிக்கணக்கில் முதலீடு செய்து படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளரின் படங்களை திருட்டுத்தனமாக ஒளிப்பதிவு செய்து திருட்டு வீடியோ கேசட் தயாரிப்பவர்களுக்கு உடந்தையாக இருக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு எதிராகத் தனிநபராக சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் எனக்கு, என் போன்று பாதிக்கப்பட்ட பிற தயாரிப்பாளர்களுக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த ஒத்துழைப்பும், உதவியும் செய்யவில்லை.”

“முறைப்படி தயாரிப்பாளர்கள் சங்கம் தான் இவ்வழக்கை நடத்தியிருக்க வேண்டும். இவ்வழக்கு அனைத்துத் தயாரிப்பாளர்களின் நலன் சார்ந்தது; நான் தொடர்ந்துள்ள வழக்குக்குத் தேவையான ஆவணங்களை முழுமையாகத் தாக்கல் செய்துள்ளேன், இதனை எதிர்கொள்ள முடியாது தண்டனையிலிருந்து தப்பிக்கவே உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். வீடியோ பைரஸி விஷயத்தில் தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதில்லை. அவ்வாறு தொடுத்தாலும் உரிய ஆவணங்களுடன் வழக்கை நடத்துவதில்லை. முதல் முறையாக நான் அதைச் செய்துள்ளேன். பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு என் வழக்கின் மூலம் கிடைக்கும் நீதி முன் உதாரணமாக இருக்கும்” என்று சக்தி வாசன் கூறியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share