இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையால், ஒரு ஜோடியின் திருமண நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள எல்லைப்பகுதி மாவட்டங்களில் ஒன்று பார்மெர். இங்குள்ள கேஜாத் கா பார் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திர சிங். இவருக்கும், சகான் கன்வார் என்ற பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரும் 8ஆம் தேதியன்று இருவருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காரணம், சகான் கன்வார் பாகிஸ்தானிலுள்ள சிந்து மாகாணம் அமர்கோட் மாவட்டத்திலுள்ள சினோய் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்.
திருமணத்தில் கலந்துகொள்வதற்காக, தனது உறவினர்களுக்குக் கடந்த சனிக்கிழமையன்று தார் எக்ஸ்பிரஸில் டிக்கெட் புக் செய்திருந்தார் மகேந்திர சிங். ஆனால், புல்வாமா தாக்குதல் மற்றும் பாலக்கோட் பயங்கரவாத முகாம்கள் மீது விமானப்படை நடத்திய தாக்குதல் காரணமாக எல்லையில் தற்போது பதற்றம் தொடர்ந்து வருகிறது. இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக தார் எக்ஸ்பிரஸ் இயக்கப்படவில்லை. லாகூர் மற்றும் அட்டாரி இடையே இயக்கவிருந்த இந்த ரயில் இயக்கப்படாததால், மகேந்திர சிங் இந்திய அரசை நாடினார். ஆனால், பலன் ஏதும் கிடைக்கவில்லை.
“தொடக்கத்தில், விசா கிடைப்பதிலேயே ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்தோம். இதற்காக, அமைச்சர் கஜேந்திர சிங்கிடம் நான் பேசினேன். அவரால் தான் 5 பேருக்கு பாகிஸ்தான் செல்ல விசா கிடைத்தது. திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன; உறவினர்கள் அனைவருக்கும் பத்திரிகை கொடுத்தாகிவிட்டது” என்று வருத்தம் தெரிவித்துள்ளார் மகேந்திர சிங். தற்போது, வேறுவழியில்லாமல் இவர்களது திருமணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.�,