nபிஸ்கட் பாக்கெட் தூக்கி எறிந்த அமைச்சர்!

Published On:

| By Balaji

கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காகச் சென்ற அமைச்சர், பிஸ்கட் பாக்கெட்டுகளைத் தூக்கி எறிந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக, அணைகள் நிரம்பி வழிகின்றன. கர்நாடகாவிலுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் கனஅடிக்கும் அதிகமான நீர் கடந்த சில வாரங்களாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், கர்நாடகா மாநிலத்தின் குடகு மாவட்டம் அமைந்துள்ளது. கேரளாவைப் போல் குடகு மாவட்டத்திலும், கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக குடகு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

அப்பகுதிகளில் வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடக முதல்வர் குமாரசாமியின் சகோதரரும் பொதுப்பணித் துறை அமைச்சருமான எச்.டி.ரேவன்னா, கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 18) அன்று ஹசன் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரா கிராமத்தைப் பார்வையிடச் சென்றார். நிவாரண முகாமில் தங்கி இருந்தவர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கினார். அப்போது அவற்றை மக்களின் கைகளில் தராமல் தூக்கி எறிந்துள்ளார் ரேவன்னா. பசியின் காரணமாக, அமைச்சர் தூக்கி எறிந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கிச் சிலர் சாப்பிட்டனர். ஆனால், அவர் தூக்கி எறிந்த பிஸ்கட் பாக்கெட்டுகளைச் சிலர், மீண்டும் அவர் இருந்த திசை நோக்கித் தூக்கி எறிந்தனர்.

[இந்தக் காட்சி](https://www.youtube.com/watch?v=c21Bs2hYXQ8), தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share