பாலகோட் தாக்குதலால் ஏன் பிரதமர் நரேந்திர மோடி பெருமை கொள்ளக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வியெழுப்பியுள்ளார்.
பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமாவில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத்தாக்குதல் சம்பவத்தால் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடி அளிக்கும் விதமாக இந்திய விமானப் படை பிப்ரவரி 26ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலகோட் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்த பதிலடி தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடியின் துணிச்சலே காரணம் என்று பாஜகவினரும், மோடி ஆதரவாளர்களும் பாராட்டி வருகின்றனர்.
ஆனால் இந்திய விமானப் படை நடத்திய பாலகோட் பதிலடி தாக்குதலை மோடி தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறார் என்றும், பாலகோட் தாக்குதல் குறித்து முழு விவரங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திருணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானைப் பிரித்ததற்காக இந்திரா காந்தி பெருமை கொண்டபோது, பாலகோட் பதிலடி தாக்குதலால் ஏன் மோடி பெருமை கொள்ளக்கூடாது என்று ராஜ்நாத் சிங் கேள்வியெழுப்பியுள்ளார். பாஜக தேசிய செயலாளர் அமித்ஷா இன்று காந்திநகர் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்த நிலையில், காலையில் அங்கு நடந்த பேரணியில் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நமது படைகளின் திறனை வைத்து பாகிஸ்தானிலிருந்து, வங்கதேசத்தை தனியாகப் பிரித்தார்கள்.
அந்தப் போர் முடிந்தவுடன் நமது மூத்த தலைவர் வாஜ்பாய் அவர்கள் நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தியைப் பாராட்டினார். நாடே அப்போது இந்திரா காந்தியைப் பாராட்டியது. புல்வாமாவில் நமது சிஆர்பிஎஃப் படைவீரர்கள் 40-42 பேர் கொல்லப்பட்டதற்கு, பதிலடி கொடுக்க நமது படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்தார் மோடி. பாகிஸ்தானை பிரித்ததற்காக 1971ஆம் ஆண்டில் இந்திரா காந்தி பெருமை கொண்டபோது, பாலகோட்டில் பதிலடி தாக்குதல் நடத்தியதற்காக ஏன் நமது பிரதமர் பெருமை கொள்ளக் கூடாது” என்றார்.�,