உலகின் பருவநிலை மாற்றம் நம்மைவிட வேகமாக உள்ளதாக ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
ஐநாவின் ‘பருவநிலை பொருளாதார அறிக்கை 2018’ அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமை அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அந்தோனியோ குட்டெரெஸ், “பருவநிலை மாற்றம் நம்மைவிட வேகமாக உள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் புயல், வெள்ளம், காட்டுத்தீ, வறட்சி ஆகியவற்றால் ஏழை மக்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு இந்தியாவின் கேரளா மாநிலத்தில் மிக மோசமான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கனடா மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுப் பெருத்த சேதத்தை விளைவித்தன. ஆர்டிக் பிரதேசத்தில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால் வடக்கு அரைக் கோளப் பகுதியின் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.. கடந்த 19 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் மிகவும் வெப்ப மயமான ஆண்டுகளாகப் பதிவாகியுள்ளன. வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம், அமைதி, பாதுகாப்பு மற்றும் சமூகங்கள் இடையே கடுமையான தாக்கத்தைப் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ள அந்தோனியோ, “பருவநிலை மாற்றம், மற்ற அபாயங்களையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பெரிய நெருக்கடிகளைத் தடுக்க பருவநிலை நடவடிக்கையை நாம் எடுத்தாக வேண்டும். நாம் அதிக லட்சியத்தோடும் உடனடியாகவும் செயல்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மாசு ஏற்படுத்தாத எரிசக்தி பயன்பாடு வளரும் நாடுகளில் குறிப்பாக அங்கு மின்வசதி இல்லாத கோடிக்கணக்கான மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக அம்மாநிலத்தில் உள்ள 80 அணைகளும் நிரம்பி வழிந்தன. 370 பேர் இந்தப் பெருமழை, வெள்ளத்தில் பலியானார்கள். 100 ஆண்டுகளில் இல்லாத மழை இது என்று அம்மாநில அரசும் தெரிவித்திருந்தது.�,