Nநூலிழையில் தவறிய பதக்கங்கள்!

Published On:

| By Balaji

முழங்கால் காயத்திலிருந்து மீண்டுவந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆசிய போட்டி தொடரில் பங்கேற்றுவரும் இந்திய நீச்சல் வீரர் விர்தவால் காடே வெறும் 0.01 விநாடிகள் வித்தியாசத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார். நேற்று நடைபெற்ற 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் 22.47 நிமிடத்தில் இலக்கைக் கடந்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.

நூலிழையில் இந்தியா பதக்கத்தைத் தவற விடுவது இது முதன்முறையல்ல. முன்னதாக 1984ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின்போது பி.டி.உஷா 0.01 விநாடிகளில் பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டிருந்தார்.

**உஷூ: பதக்கங்களை உறுதிப்படுத்திய இந்தியா**

18ஆவது ஆசியப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் உஷூ போட்டியின் ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவுக்கான காலிறுதி ஆட்டம் நேற்று (ஆகஸ்ட் 21) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் சூர்ய பானு பிரதாப் சிங், பிலிப்பைன்ஸின் சக்லக் ஜீனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற கிரேவால் நரேந்தர் உஸ்பேக்கிஸ்தானின் ராக்கிமோவ் அக்மலை எதிர்த்து விளையாடினார். இதில் 2-0 என்ற கணக்கில் கிரேவால் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

ஆண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சந்தோஷ் குமார் தாய்லாந்தைச் சேர்ந்த பாவோக்ரதோக் பிதக்கை 2-1 என்ற கண்ணகில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரோஷிபினா தேவி பாகிஸ்தானின் முபாஷராவை 2-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதியில் இடம்பிடித்தார்.

இவற்றின் மூலம் தற்போது இந்தியாவுக்கு நான்கு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. அவை என்னென்ன பதக்கங்கள் என்பது இன்று நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டிகளின் முடிவில்தான் தெரியவரும்.

**கோல் மழை பொழிந்த மகளிர் ஹாக்கி**

மகளிர் ஹாக்கி பிரிவின் லீக் ஆட்டத்தில் நேற்று இந்தியா – கஜகஸ்தானை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்தியா 21-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

**இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் அடித்த கோல்களின் விவரம்:**

லால்ரெம்ஷியாமி – 3 கோல்கள்

உதிதா – 1 கோல்

நேஹா கோயல் – 1 கோல்

நவ்நீத் கவுர் – 3 கோல்கள்

வந்தனா கடாரியா – 3 கோல்கள்

லில்லிம்மா மின்ஸ் – 2 கோல்கள்

நவ்ஜோத் கவுர் – 2 கோல்கள்

குர்ஜித் கவுர் – 4 கோல்கள்

தீப் க்ரேஸ் எக்கா – 1 கோல்

மோனிகா – 1 கோல்

நேற்றைய மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட 10 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. 30 தங்கம், 18 வெள்ளி, 12 வெண்கலம் உட்பட 60 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share