Q
2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 9.8 கோடி நபர்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் இருக்கும் என்று ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
லேன்செட் நீரிழிவு மற்றும் உட்சுரப்பியல் பத்திரிகையில் வெளியான ஆய்வில், அடுத்த 12 ஆண்டுகளில் இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான இன்சுலினின் அளவு 20 விழுக்காடு உயரும் என்று தெரியவந்துள்ளது. உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு மடங்கும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இன்சுலின் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படவில்லை என்றால் 2030ஆம் ஆண்டில் இன்சுலினை எட்டமுடியாத வயதுவந்தவர்களின் எண்ணிக்கை 7.9 கோடியாக உயரும் என்று ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வும் கூறுகிறது.
உலகளவில் இரண்டாம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வயதுவந்தவர்களின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டில் 40.6 கோடியிலிருந்து 2030ஆம் ஆண்டில் 51.1 கோடியாக உயரும் என்று இந்த ஆய்வு முடிவுகள் வாயிலாகத் தெரிகிறது. இவர்களில் 50 விழுக்காட்டுக்கும் மேலானோர் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. சீனாவில் 13 கோடி நபர்களும், இந்தியாவில் 9.8 கோடி நபர்களும், அமெரிக்காவில் 3.2 கோடி நபர்களும் இருப்பார்கள் என்று இந்த ஆய்வு கூறுகிறது. உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6.92 கோடி எனத் தெரிகிறது.�,