<
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி வருகிற செப்டம்பர் 16 ஆம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை எதிர்த்து செப்டம்பர் 8 ஆம் தேதி திருச்சியில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தினர். எதிர்க் கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு எதிராக தமிழக பாஜக சார்பில் திருச்சியில் நேற்று (செப்டம்பர் 9) நீட் தேர்வுக்கு ஆதரவாக ஒரு பொதுக் கூட்டம் நடத்தினர்.
இந்நிலையில், டி.டி.வி. தினகரன் இன்று (செப்டம்பர் 10) மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளித்து நீட் பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி அதிமுக அம்மா அணி சார்பில் மாணவர்கள் நலன் கருதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும். இதில் கட்சியின் தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “நீட் தேர்வுக்கு எதிராக தமிழகமே ஒரே குரலில் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து போராடி வருகிறது. ஜெயலலிதாவின் விடா முயற்சியால் கடந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைத்தது. நீட் தேர்வில் தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க மத்திய அரசு அவரசர சட்டம் இயற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.�,”