கடலூரில் ஹவாலா பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக, காவலர்கள் மூன்று பேரைப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணன். மேலும், அடிக்கடி குடித்துவிட்டுப் பணிக்கு வந்த மற்றொரு காவலரையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் கடந்த ஆண்டு வேப்பூர் தலைமைக் காவலர் ரவிக்குமார், கம்மாபுரம் தலைமைக் காவலர் செல்வராஜ் மற்றும் சேத்தியாத்தோப்பு தலைமைக் காவலர் அந்தோணிசாமிநாதன் ஆகியோர் வாகனச் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்தை வழிமறித்து சோதனை செய்தபோது, அந்தப் பேருந்தில் வந்த ஒருவர், கொண்டு வந்திருந்த பையில் ரூ.50 லட்சம் ஹவாலா பணம் இருந்தது. ரூ.50 லட்சத்தைப் பறிமுதல் செய்த மூன்று தலைமை காவலர்களும், அந்த பணத்தில் இருந்து ரூ.20 லட்சத்தை எடுத்துக்கொண்டு, மீதிப் பணத்தைக் கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பணத்தை எடுத்தது தொடர்பாக மூவர் மீதும் புதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. முன்னதாக அவர்கள் 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கிடையில் அவர்கள் மீதான விசாரணை முடிவடைந்தது. தலைமைக் காவலர்கள் மூன்று பேரும் பணம் எடுத்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் மூவரையும் பணியில் இருந்து நீக்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். இதே போல் அடிக்கடி குடித்துவிட்டுப் பணிக்கு வந்த சிறுபாக்கம் காவல் நிலையக் காவலர் அஸ்வின்டேவிட்டையும் பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.�,