நாட்டின் முதல் ’பிரதான் மந்திரி கவுஷல் கேந்திரா’ அக்டோபர் 23ஆம் தேதியன்று டெல்லியில் திறந்துவைக்கப்பட்டது. டெல்லி நகராட்சி மன்றத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய பெட்ரோலியத் துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் திறந்து வைத்தனர். நாடு முழுவதிலும் ஸ்மார்ட் நகரங்களில் திறன் மேம்பாட்டுக்காக பிரதான் மந்திரி கவுஷல் கேந்திரா நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திறன் மேம்பாட்டு நிலையம் ஆண்டுக்கு 4,000 இளைஞர்களுக்குப் பயிற்சியளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. சுமார் 1000 இளைஞர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் விடுதி ஒன்றைக் கட்டமைக்க நிலம் வழங்க ஒப்புதல் அளிக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டார். பிரதான் மந்திரி கவுஷல் கேந்திராவில் பயிற்சி பெற டெல்லிக்கு வரும் இளைஞர்கள் தங்கி பயிற்சி பெற உதவியாக இருக்கும் என்றும் தங்கும் விடுதியைத் திறன் மேம்பாட்டு அமைச்சகமே அமைத்துத் தரும் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “2030ஆம் ஆண்டுக்குள் பொருளாதார ரீதியாக உலகளவில் முதல் மூன்று இடங்களில் இந்தியா இருக்கும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளையும், திறன் மேம்பாட்டு முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இளைஞர்கள் பயிற்சி பெற்று சுயமாக வாழ இந்தத் திறன் மேம்பாட்டு நிலையங்கள் உதவியாக இருக்கும்” என்று கூறினார்.
�,”