Nநாங்குநேரியில் நடப்பது என்ன?

Published On:

| By Balaji

இன்னும் 15 நாட்களே உள்ளதால் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சில நாட்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் என முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

அதிமுக நாராயணனுக்கு ஆதரவாக திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கடம்பூர் ராஜு, காமராஜ், ராஜலட்சுமி, விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்,ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 16 அமைச்சர்கள் தொகுதியில் களமிறங்கியுள்ளனர். நாங்குநேரி பகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்துள்ள அமைச்சர்கள், ஒவ்வொரு பகுதியாக பிரித்துக்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

ஆளுங்கட்சி என்பதால் தேர்தல் செலவுகளுக்கு அதிமுக எந்தவிதமான குறையும் வைக்கவில்லை. அத்துடன், அமைச்சர்கள் தேர்தல் பணிகளில் தங்களுக்கு உதவியாக துறை அதிகாரிகளையும் பயன்படுத்திக்கொள்கின்றனர். இடைத் தேர்தலை முன்னிட்டு அமைச்சர்கள் தரப்பிலிருந்து அதிகாரிகளிடம், ‘வழக்கமாக வருவதைத் தாண்டி தேர்தலுக்கென தனியாக வசூலிக்க வேண்டும்’ என்று உத்தரவு சென்றிருக்கிறது.

அதிமுகவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் காங்கிரஸின் பிரச்சாரமும் அமைந்துள்ளது. உள்ளூர் நிர்வாகிகள் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தடைகளைத் தாண்டி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ரூபி மனோகரன்.

ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் கொடிகட்டிப் பறந்த ரூபி மனோகரனுக்கு சீட் கிடைத்தது அவர் கன்னியாகுமரியை சாந்தவர் என்பதற்காக மட்டுமல்ல.

மக்களவைத் தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் ராகுல் காந்தி கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஏறக்குறைய ரூ.1 கோடி வரை செலவாகும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. அப்போது, காங்கிரஸின் தமிழ்நாடு பொருளாளரான நாசே ராமச்சந்திரனிடம் கேட்டபோது, 10-20 லட்சம் வரைதான் தர முடியும் என்று கைவிரித்துவிட்டார். இதனையடுத்து, செலவு செய்வதற்கான யாராவது இருக்கிறார்களா என்று தேடிய நேரத்தில் கராத்தே தியாகராஜன்தான் ரூபி மனோகரனை கே.எஸ்.அழகிரியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது, பொதுக் கூட்டத்திற்கான முழுச் செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருக்கிறார் ரூபி மனோகரன். அந்த சமயத்தில் கன்னியாகுமரி தொகுதியைக் கேட்டு ரூபி மனோகரனும் காய் நகர்த்தி வந்தார். இருப்பினும், அவரிடம் கே.எஸ்.அழகிரி, “உங்களுக்கு சீட் தர முடியும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியாது” என சொல்லியிருந்தார். 20கோடி ரூபாய் செலவு செய்கிறேன் என பணத்தையே காட்டியதனால் அவருக்கு சீட் தந்தார்கள்.

ரூபி மனோகரனுக்கு ஆதரவாக வசந்தகுமார் தலைமையில் தனுஷ்கோடி ஆதித்தன், பீட்டர் அல்போன்ஸ், குமரி அனந்தன், சுதர்சன நாச்சியப்பன், செல்வப்பெருந்தகை ஆகிய முக்கிய நிர்வாகிகளை உள்ளடக்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியான திமுக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் கனிமொழி உள்பட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸில் பெரிய அளவில் நிர்வாகிகள் இல்லாததால் செலவுக்கான தொகை முழுவதும் திமுகவிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதில்தான் பூத் கமிட்டி செலவுகளும், வாக்காளர்களுக்கு ஒட்டூக்கு பணம் கொடுக்கும் பட்ஜெட்டும் திட்டமிடப்பட்டுள்ளதாம். முழுப் பொறுப்பும் திமுகவிடமே ஒப்படைக்கப்பட்டிருப்பதால் பூத் கமிட்டி உள்ளிட்ட தங்களுக்கான தேர்தல் செலவுகளுக்கான பணம் வரவில்லை என்று குமுறுகிறார்கள் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள். இருப்பினும் அனைத்தையும் தாண்டி ரூபி மனோகரனுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளில் நிர்வாகிகள் இணைந்து பம்பரமாக பணியாற்றி வருகின்றனர்.

தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் இன்று (அக்டோபர் 6) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேல பொத்தை, சிதம்பராபுரம், கலங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்குச் சேகரித்தார். அப்போது அந்த பகுதிகளில் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண்களிடம், உரையாடிய அவர், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share