பாகிஸ்தான் ராணுவ தளபதியைக் கட்டிப்பிடித்த நவ்ஜோத் சிங் சித்து மீது தேசத்துரோக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பிரதமராக தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி பதவியேற்றார். இந்த நிகழ்வில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்துகொண்டார். நிகழ்வில், பாகிஸ்தான் ராணுவ தளபதி குமர் ஜாவத் பாஜ்வாவை சித்து கட்டிப்பிடித்த வீடியோ காட்சி வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதவிர, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி மசூத் கான் பக்கத்தில் நவ்ஜோத் அமர்ந்திருந்ததும் சர்ச்சையை உருவாக்கியது.
பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டிப்பிடித்த நவ்ஜோத்தின் செயலை ஏற்க முடியாது என்று பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங்கும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நவ்ஜோத்துக்கு எதிராக பிகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞரும் லோக் சமதா கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சுதிர் ஓஜா என்பவர் நேற்று (ஆகஸ்ட் 20 ) புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், இந்திய ராணுவ வீரர்கள் பலர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்குக் காரணமான பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவத் பாஜ்வாவை சித்து கட்டித் தழுவி இருப்பது என்னைப்போன்ற ஏராளமான இந்தியர்களின் உணர்வைக் காயப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது, நாட்டுக்குத் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை கேலி செய்வதாகவும் உள்ளது. சித்து மீது ஐ.பி.சி. 124A, 153B மற்றும் 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் 24ஆம் தேதி மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.�,