Nதிமுக பிடியில் கமல்? : கனிமொழி

Published On:

| By Balaji

கமலஹாசன் அவருடைய சொந்த கருத்துக்களைச் சொல்லி வருகிறார்; அவரை திமுக இயக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

கமல் கடந்த சில நாட்களாகத் தனது அரசியல் சார்ந்த கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். மேலும், தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி வருகிறார். இதனால், அமைச்சர்கள் கடுமையாக கமலை விமர்சித்து வந்தனர். ஆனால், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கமலுக்கு ஆதரவு அளித்தார். அதனால், அமைச்சர்கள் திமுக கமலை இயக்குகிறது என்று விமர்சித்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சென்னையில் ஜூலை 21-ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தமிழக அரசு முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. எம்பிபிஎஸ் கலந்தாய்வு முடிந்த பிறகுதான் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கலந்தாய்வு நடந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு எல்லாமே எதிர்மாறாகவே நடக்கிறது. தமிழக மாணவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். நீட் தேர்வு பிரச்னையில் தமிழக அமைச்சர்கள், இப்போது பிரதமரை சென்று பார்த்து இருக்கிறார்கள். இவர்கள் இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு கேட்டுள்ளார்களா? அல்லது நீட் தேர்வே தமிழகத்துக்குத் தேவை இல்லை என்று கேட்டுள்ளார்களா? என்ற தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை. எல்லாம் மக்களை ஏமாற்றும் வேலையாக இருக்கிறது.

யாருடைய தயவையும் நம்பி திமுக இல்லை. இந்த இயக்கத்துக்குத் தலைவர்கள் இருக்கிறார்கள், செயல் தலைவர் இருக்கிறார். கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எங்களுக்கு வேறு யாரும் தேவை இல்லை. நடிகர் கமலஹாசன் மற்றவர்கள் இயக்கி, இயங்கக் கூடியவர் அல்ல. யாரையும் இயக்கி அதன் மூலம் ஆதாயம் அடைய வேண்டிய நிலை திமுகவுக்கு இல்லை. கமலஹாசனுக்கு திமுக உதவி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அவர் சுயமாக செயல்படக்கூடியவர். கமலஹாசன் அவருடைய சொந்த கருத்துக்களைச் சொல்லி வருகிறார். அது பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel