nதமிழக அரசியலை நையாண்டி செய்யும் எல்கேஜி!

Published On:

| By Balaji

நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடித்திருக்கும் படம் எல்கேஜி. பிரபுதேவா உள்ளிட்ட சிலரிடம் உதவியாளராக இருந்த பிரபு இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் பிரபு, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளர் விது ஐயனா, படத்தை வெளியிடும் சக்திவேலன், ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ஜேகே ரித்தீஷ், மயில்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் பேசும்போது, “எங்கள் நிறுவனத்தில் ஜெயம் ரவி, பிரபுதேவா ஆகியோர் நடிக்கும் படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அவற்றை முந்திக்கொண்டு இந்தப்படத்தை முடித்துக் கொடுத்துவிட்டார்கள். எனவே வேறு வழியில்லாமல் இந்தப் படத்தை முதலில் வெளியிடுகிறோம். ஆர்.ஜே.பாலாஜி மிகத் திறமையானவர், இந்தப் பட உருவாக்கத்தில் அவருடைய உழைப்பு பெரிது. நல்ல விஷயங்களைப் பேசியிருக்கும் இந்தப் படத்தை எங்கள் அப்பா பெயரில் தொடங்கியுள்ள நிறுவனத்தின் முதல் படமாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்” என்று கூறினார்.

படத்தின் நாயகன் ஆர்ஜே பாலாஜி பேசுகையில், “2017ஆம் ஆண்டு 17 படங்கள், 2018ஆம் ஆண்டு 13 படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்தேன். எனக்கு அதில் முழுத் திருப்தி இல்லை. நான் எல்கேஜி படத்திற்கான கதையை எழுதி வந்தேன்.

சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு வந்த வெள்ளத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் 57 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. இளம் தலைமுறையினர் ஓட்டுப் போட வேண்டாம் என்று விரக்தியில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன், அது பற்றியும் எல்கேஜி பேசுகிறது.

எல்கேஜி படம் பார்த்துவிட்டு கண்டிப்பாக வாக்கு பதிவு சதவீதம் கூடும். இது ‘ஸ்பூஃப்’ படமல்ல. ஆனால், படம் பார்க்கும் ரசிகர்களை கண்டிப்பாகச் சிந்திக்கவைக்கும் படமாக இருக்கும். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பத்துக்காக எடுக்கப்பட்ட படம் அல்ல, சமுதாய நோக்குடன் எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தைக் கண்டிப்பாக எல்லோரும் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தப் படம் தொடங்கியதும் பிஜேபி, ஆர்எஸ்எஸ், சங்கி என்றார்கள். முன்னோட்டம் வெளியானதும் திமுக என்றார்கள். இப்படம் இதுவரை தமிழகம் கடந்து வந்த அரசியலை யாருடைய மனதையும் சங்கடப் படுத்தாமல் பேசும்” என்று பேசியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இப்படம் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாக உள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share