தமிழ் சினிமாவில் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்படும் படங்கள்கூட சர்வதேச திரைப்பட விழாக்களில் கண்டுகொள்ளப்படுவதில்லை. தேசிய விருதுகள் பெற்ற படங்களும் உலக சினிமா ரசிகர்களால் முக்கியமாகக் கருதப்படும் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள முடிவதில்லை. அத்தகைய திரைப்பட விழாக்களில் போட்டியிடுவதற்கான தரம்கூட இந்தியாவில் உருவாகும் பெரும்பாலான படங்களுக்கு இல்லை என்கின்றனர் தீவிர உலக சினிமா ரசிகர்கள். ஆனால் அத்தகைய ரசிகர்களை மட்டுமல்லாமல் உலக சினிமாவில் கவனம் பெறும் சர்வதேச இயக்குநர்களையும் வியந்து பார்க்க வைத்துள்ளது செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள டூ லெட் திரைப்படம்.
டூ லெட் திரைப்படம் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் அப்படம் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.
கோவா திரைப்பட விழாவில் தற்போது டூ லெட் திரைப்படம் கலந்துகொண்டுள்ள நிலையில் இயக்குநர் செழியனை தொடர்புகொண்டு பேசினோம். “கோவா திரைப்பட விழாவில் மூன்று போட்டிப் பிரிவுகளில் டூ லெட் கலந்துகொள்கிறது. இந்தியப் படங்களுக்கான போட்டி பிரிவு, அறிமுக இயக்குநர்கள் மட்டும் கலந்துகொள்ளும் சர்வதேச அளவிலான போட்டி பிரிவு, அனைத்துப் படங்களுக்கான சர்வதேச போட்டி பிரிவு ஆகியவற்றில் கலந்துகொள்கிறது. கோவா திரைப்பட விழா வரலாற்றிலேயே முதன்முறையாக சர்வதேசப் போட்டி பிரிவில் கலந்துகொள்ளும் முதல் தமிழ்ப் படம் டூ லெட் தான்” என்று கூறினார்.
சமீப காலங்களில் படங்கள் திரையரங்குகளில் திரையிடப்படுவதற்கு முன் தேசிய விருதோ அல்லது ஓரிரு திரைப்பட விழாக்களுக்குத் தேர்வானாலோ அந்தப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் உருவாகி வருகிறது. தேசிய விருது உள்பட 26 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ள டூ லெட் திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதனால் இந்தப் படம் எப்போது திரையரங்கில் வெளியாகும் என்று இயக்குநரிடம் கேட்டோம். அதற்குப் பதிலளித்த அவர், “படத்தின் வெளியீட்டுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. டிசம்பரின் இறுதியில் அல்லது ஜனவரியின் தொடக்கத்தில் டூ லெட் திரைப்படத்தைத் திரையரங்கில் காணலாம்” என்று கூறினார்.
உலக அரங்கில் கவனம் பெறும் படங்கள் அனைத்தும் அந்தந்த நாட்டின், மக்களின் கதைகளை அவர்களது கலாச்சாரம், வாழ்க்கை முறையுடன் சேர்த்து படைப்பாக உருவாகியுள்ளன. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மென்பொருள் துறை வளர்ச்சியடைந்ததும் வீடு வாடகைக்குக் கிடைப்பது எவ்வளவு பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது, நடுத்தர மக்கள் எவ்வாறு இதில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை இந்தப் படத்தில் செழியன் காட்சிப்படுத்தியுள்ளார்.
கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செழியன் தான் இயக்கிய டூ லெட் திரைப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் இணைந்து நடித்துள்ளனர்.�,”