அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும். இதனால் தமிழகம், புதுச்சேரியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்று (டிசம்பர் 01) வானிலை மைய இயக்குநர் பாலசந்திரனை செய்தியாளர்கள் சந்தித்தபோது, “தென் கிழக்கு அரபிக் கடலில் நிலவும் ஓகி புயல் தீவிரப் புயலாக வலுவடைந்து இன்று காலை 8. 30 மணியளவில் லட்சத் தீவுகள் பகுதிகளில் உள்ள அமிழ்தினி தீவிலிருந்து தென்கிழக்கே சுமார் 270 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்து வரும் 24 மணிநேரத்தில் லட்ச தீவுகளில் கடந்து செல்லும்.
தற்போது தெற்கு அந்தமான் பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால் அடுத்து வரும் இரு தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். மேலும் அடுத்துவரும் மூன்று அல்லது நான்கு தினங்கள் வரை உள்ள காலகட்டத்தில் வடமேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கரையை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பாபநாசத்தில் 45 செ.மீ மழை பெய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏறத்தாழ 21 இடங்களில் மிகக் கனமழை பெய்துள்ளது.
அக்டோபர் 1முதல் நவம்பர் 27 வரை உள்ள காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்குப் பருவ மழை இயல்பை விட 18 சதவிகிதம் குறைவாக இருந்தது. இன்று, ஓகி புயல் காரணமாக, 4 சதவிகிதம் மட்டுமே குறைவாக உள்ளது.
**வானிலை முன்னறிவிப்பு:**
அடுத்து வரும் 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
**மீனவர்களுக்கு எச்சரிக்கை:**
தென் தமிழகம் மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் குமரிக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோரப் பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு சில முறை மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு பாலசந்திரன் தெரிவித்தார்.�,