பெண் என்றும் பாராமல், ராமதாசின் அடியாட்கள் விடிய விடிய எனது கைப்பேசிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து, ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜெ. தீபா குற்றம் சாட்டியுள்ளார்.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ. தீபா இன்று ஏப்ரல் 30ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாமக நிறுவனர் ராமதாசின் அடியாட்கள் விடிய விடிய என்னைப் பெண் என்றும் பாராமல் எனது கைப்பேசிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, ஆபாசமாகத் திட்டி செய்திகளை அனுப்பி, அரசியல் களத்திலிருந்து நான் ஓடவேண்டும் என்று மிரட்டிப் பார்க்கிறார்கள். இதுமாதிரியான சலசலப்புக்கு நான் அஞ்சமாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பசுமை தாயகம் என்ற பெயரில் தனது மகனை வைத்து மரம் வளர்ப்போம் என்று ஒரு அமைப்பைத் தொடங்கி, வட மாவட்டம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிச் சாய்த்த கூட்டம் தான் டாக்டர் ராமதாஸ் கட்சி. ஜாதி கலவரத்தை தூண்டுவதால்தான் பாமக புறக்கணிக்கப்படுகிறது என்பதை எல்லோரும் அறிவார்கள். மேலும், ஊழல் குறித்து உலகம் முழுக்க பேசும் ராமதாஸ் தனது மகன் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது முறைகேடாக நடந்து கொண்ட ஊழல் வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதை ஊடகங்கள் வாயிலாக நாடு பார்த்துக் கொண்டிருப்பதை மறந்து பேசுவது வேடிக்கையாக உள்ளது.
மகனை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து தமிழகம் முழுவதும் பாமக டெபாசிட் தொகை இழந்த கதையை ராமதாஸ் மறந்து பேசுகிறார் . கூட்டணி என்ற பெயரில், போயஸ் தோட்டத்திற்கும் கோபாலபுரத்திற்கும் நடையாய் நடந்து பிழைப்பு நடத்திய பாமக-வால் தனித்து நின்று அரசியல் செல்வாக்கை நிரூபிக்க முடியவில்லை. திராவிட கட்சியின் தயவால் எம்.பி. எம்.எல்.ஏ-க்களை பெற்ற பாமக தனித்து நின்று ஒரு சீட்டு கூட வெற்றி பெற முடியாததுக்குக் காரணம் என்ன?மக்களால் நிராகரிக்கப் பட்ட அமைப்பு தான் பாமக.
அம்மாவின் அரசியல் வாரிசாக பெரும் மக்கள் சக்தியுடன் வலம்வரும் என்னை அரசியல் களத்தில் இருந்து விரட்டவேண்டும் என்ற தீய நோக்கத்தோடு, என் அரசியல் வளர்ச்சி அபரிவிதமாக வளர்ந்து வருவதைப் பொறுக்க முடியாமல் என் கைப்பேசிக்கு ராமதாசின் கூலிப்பட்டாளம் இழிவாகப் பேசியது வருத்தம் அளிக்கிறது. அனைத்தையும் பதிவு செய்திருக்கின்றேன். அதேபோல் ராமதாசின் அடியாட்கள் எனக்கு எழுதி அனுப்பிய குறுஞ்செய்திகளையும் பதிவு செய்துள்ளேன். குடும்ப பெண்ணான என்னைத் தவறாக சித்தரித்து இரவு முழுவதும் எனக்கு அவர்களின் தொண்டர்களை விட்டு கொலை மிரட்டல் விடுத்து மிரட்டிப் பேச வைப்பது தமிழர் பண்பாடு பற்றி வாய் கிழிய பேசும் பெரியவர் ராமதாசுக்கு முறையா? கேரள பெண்களுக்காக குரல் கொடுத்தவர் என்னை இழிவாக தன் தொண்டர்களை வைத்துப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தயார். கலாச்சாரம் பாதுகாக்கப்படவும், பெண்கள் சுதந்திரமாக செயல்படவும் வேண்டுமென்றால் ராமதாசை அரசியலில் இருந்து புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.�,