nசிறப்புக் கட்டுரை: ஒரு தேசம், ஒரு தேர்தல்?

public

நிலாஞ்சன் முகோபாத்யாய

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வரும் #ஒரு தேசம் ஒரு தேர்தல் (#OneNationOnePoll) என்ற கோஷம், ஜனநாயக நடைமுறைகளை அதீதமாக எளிமைப்படுத்தும் அதே நேரத்தில், உண்மைகளை மறைத்து, இந்த யோசனைக்கு எதிராக வாதிடுபவர்களை தேசவிரோதிகளாகவும் நாட்டின் முன்னேற்றத்தைத் தடை செய்யும் கூட்டம் என்றும் முத்திரை குத்தும் வாய்ப்பைக் கட்சித் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் வழங்கும் இன்னொரு போலியான பிரச்னையைக் கிளப்பிவிட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது உண்மையில் நல்ல யோசனைதானா என்பன போன்ற சந்தேகங்களை –அது எவ்வளவு நுட்பமாக இருந்தாலும் சரி- வெளியிடும் யாரும் சந்தேகத்துக்கு உரியவர், தேச நலனுக்கு எதிரானவர் என்று சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால், உண்மையிலேயே இந்த யோசனை தேவையா, சாத்தியமா என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே அல்லாமல் உண்மையில் நல்லதுதானா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.

50 ஆண்டுகளுக்கு முன்புகூட நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமா என்ற விவாதம் நடந்தது. 1967இல் இந்தியாவில் நான்காவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதன் மூலம் மத்தியில் குறைவான மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றது. ஆனால், இந்தக் கட்சி பல மாநிலங்களில் அதிகாரத்தை இழந்தது. அங்கெல்லாம் கூட்டணி அரசுகள் உருவாக்கப்பட்டன. வேறு வழியில்லாமல் கூட்டணி சேர்ந்த கட்சிகளால் தங்கள் வேறுபாடுகளை மறைத்துக்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் அரசும் இந்த வேறுபாடுகளைத் தூண்டிவிட்டது. எனவே இடையிலேயே இவை கூட்டணிகளை முறித்துக்கொண்டதால், இடைத்தேர்தல்கள் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்திராகாந்தி கூட 1971இல் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முடிவுசெய்தார். 1967வரை தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்பட வேண்டும் என்ற நம்பிக்கை இருந்து வந்ததை இந்த நிகழ்வுகள் குறிப்பிடுகின்றன. ஆனால், அதன் பிறகு எல்லாமே ஏறுமாறாகிவிட்டன. மத்திய, மாநிலத் தேர்தல்கள் ஒருங்கிணைப்பு இல்லாததால் இந்தியாவின் நிர்வாகம் மிகவும் கடினமாகிவிட்டது என்று மோடி வாதிடுகிறார். இந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு #ஒருதேசம்ஒருதேர்தல்தான் என்றும் மாநிலங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தினால், பாரதம், பழங்காலத்தில் இருந்ததைப்போல பொற்காலமாக உருமாற்றம் அடையும் என்றும் கூறுகிறார்.

ஆனால், இது அவ்வளவு எளிமையானது அல்ல. 1951-52இல் நாடு முழுவதும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதன் பிறகு 1956-57களில் புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 1951-52இல் தேர்தல் நடந்த சில மாநிலங்கள் 1957இல் இல்லாமல் ஆயின. திருவிதாங்கூர் கொச்சி, பாட்டியாலா, கிழக்கு பஞ்சாப் மாநிலங்கள் ஒன்றியம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட கேரளா மற்றும் பஞ்சாபாக மாறிவிட்டன. சட்டபூர்வமாகக் கட்டாயமாக்கப்பட்டபடி இந்த மாநிலங்களில் 1957இல் தான் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த மாநிலங்களின் அரசுகள் சிறுபான்மை அரசுகளாகிவிட்டன. மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, இந்த இரண்டு மாநிலங்களிலும் 1954இல் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. இடைத்தேர்தலுக்குப் பிறகும்கூட, திருவாங்கூர்-கொச்சி அரசு நிலைத்திருக்க முடியாமல், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவால் 1956இல் ஆட்சி சரிந்தது. சட்டமன்றத்தைக் கலைப்பதைத் தவிர்க்க வேண்டுமென்றால் அது குதிரை பேரத்திற்கு வழிவகுத்திருக்கும். 1957இல் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் கட்சியால் இதை ஜீரணிக்க முடியவில்லை. எனவே, கூட்டணிக் கட்சிகளைத் தூண்டிவிட்டு ஆட்சியைக் கலைத்து, 1959இல் குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திணித்தது. இதைத் தொடர்ந்து 1960இல் அங்கு தேர்தல்கள் நடைபெற்றன.

நாடாளுமன்றத்துக்கான மூன்றாவது பொதுத் தேர்தல் 1962இல் நடைபெற்றது. ஆனால், அதற்கு ஓராண்டுக்கு முன் 1961இல், ஒரிசாவில் காங்கிரஸ் கட்சி தன் கூட்டணிக் கட்சியான கணதந்த்ர பரிஷத்துடன் இணைந்து செயல்படத் தவறியதால் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், அவ்வப்போது நடைபெற்று வந்த இந்த விஷயம் 1967இல் பெரும் போக்காக மாறியது. மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் சட்டமன்றம் கலைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, வெவ்வேறு பிரிவினருக்கும் இடமளிக்கும் வகையில் முதலமைச்சர்கள் அவ்வப்போது மாற்றப்பட்டனர். ஆனால், இது மற்ற எல்லா இடங்களிலும் நடைபெறவில்லை: பிகாரில் 1969 மற்றும் 1972களில்; ஹரியானாவில் 1968 மற்றும் 1972களில்; கிழக்கு வங்கத்தில் 1967, 1969, 1971 மற்றும் 1972 என நான்கு தேர்தல்கள் நடந்தன. ஒரிசாவில் 1971 இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. 1971இல் இந்திரா காந்தி ஆட்சிக் காலம் முடிவதற்கு முன்னதாகவே தேர்தல்கள் நடத்துவதற்கு உத்தரவிட்டதும் கூட இந்தியா தொடர் தேர்தல்களின் நாடாக மாறிவருவதை உறுதிசெய்தது.

**ஆட்சியை எதிர்க்கும் மக்களின் உரிமை**

ஜனநாயகத்தில் அரசின் கொள்கைகளை எதிர்ப்பதற்கு மக்களுக்கு உரிமை உண்டு. ஒரு அரசைப் பதவியிலிருந்து விலக்கும் உரிமை (Right to Recall) இல்லை என்பதால், போராட்டங்கள் மட்டுமே அரசுகளைக் கவிழ்க்க முயற்சி செய்யும் ஒரே சட்டபூர்வமான நடவடிக்கையாக இருந்துவருகிறது. கூட்டணிக் கட்சிகள் அல்லது வெளியிலிருந்து ஆதரவு தரும் பிற கட்சி உறுப்பினர்களின் உதவியோடு அமையும் ஆட்சி அமைக்கப்படும்போது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் புதிதாகத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவார்கள். மக்களுக்கு எதிரான ஆட்சியிலிருந்து தப்பிக்க ஒரே வழி புதிய அரசு ஆட்சி அமைப்பது மட்டும்தான். சட்டங்களில் மாற்றம் செய்து, சட்டமன்றங்களின் பதவிக் காலத்தை மாற்ற இயலாததாக நிர்ணயம் செய்வதன் மூலம் மக்களின் இந்த உரிமையைப் பறிக்கக் கூடாது. கொள்கையற்ற கூட்டணிகள் ஆட்சி அமைப்பதற்கான வழிமுறையாக இது அமைந்துவிடும்.

உதாரணமாக, 2015இல் பிஹாரில் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதிராக அமைந்திருந்தன. ஆனால், அதே கட்சியுடன் நிதீஷ் குமார் இப்போது இணைந்துவிட்டார். இதனால், தார்மிக ரீதியில் அவருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் புதிதாகத் தேர்தல் நடைபெறுவதை 2020 வரையில் தடுக்கும் ஒரு சட்டம் இருந்திருந்தால் அவருக்கு தார்மிகப் பின்னடைவு எதுவும் ஏற்பட்டிருக்காது. இடைத்தேர்தல் நடைபெற வழியில்லை என்பதால், கொள்கையற்ற கூட்டணியைத் தவிர வேறு வழியில்லை என்று அவருடைய அணி மாறல் நியாயப்படுத்தப்பட்டிருக்கும்.

ஒருங்கிணைந்த தேர்தல்கள் நடைபெறும் வழக்கம் தவறிப்போனது 1960கள் மற்றும் 1971களில் நடைபெற்ற நிகழ்வுகளால் மட்டும் அல்ல. 1980களில் அஸ்ஸாமில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டங்கள் அரசியல் செயல்பாடுகளையே முடக்கிப்போட்டு, 1983 மற்றும் 1985களில் தேர்தல்கள் நடைபெற்றன. 1983இல் புயல்போல ஆட்சியைப் பிடித்த என்.டி. ராமாராவ் இதய அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த சமயத்தில் அவரைப் பதவியிலிருந்து இறக்கி வேறு ஒருவரைக் கொண்டுவர வேண்டும் என்ற காங்கிரஸின் சூழ்ச்சியை முறியடிக்க முன்கூட்டியே தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்று முடிவு செய்தார்.

அரசியல் குழப்பங்களைத் தாண்டிய காரணங்களும் இருக்கின்றன. அரசியல் சட்டப் பிரிவு 356ஐப் பயன்படுத்தி மாநில அரசுகளை மத்திய அரசு கலைத்துவிடுவதும் மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடக்க ஒரு காரணம். சில சமயம் முதலமைச்சர்கள் அரசியல் லாபத்துக்காகவும் தேர்தலை முன்கூட்டியே நடத்த விரும்புகிறார்கள். பிரதமர்களும் அப்படி விரும்பியிருக்கிறார்கள். இந்திரா காந்தி 1971இல் பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்தினார். அடல் பிஹாரி வாஜ்பாய் 2004இல் ‘இந்தியா ஒளிர்கிறது’ கோஷத்தை நம்பி தேர்தல் நடைபெற வேண்டிய காலத்துக்குச் சில மாதங்கள் முன்பே களமிறங்கினார். அந்த உத்தி பலிக்கவில்லை என்பது வேறு விஷயம்.

**ஜனநாயக நெறிகளுக்கு நல்லதல்ல**

ஒரு தேசம், ஒரு தேர்தல் கோஷத்துக்குப் பின்னால் இருப்பது தேர்தல் லாபம் சார்ந்த கணக்குகள்தான். ஆனால், ஜனநாயக நெறிகளுக்கு இது நல்லதல்ல. 2014இல் நாடாளுமன்றத்துக்கும் அனைத்துச் சட்டமன்றங்களுக்கும் ஒன்றாகத் தேர்தல் நடந்திருந்தால் பாஜக நாடு முழுவதிலும் மத்தியிலும் மாநிலங்களிலும் பெருமளவில் வெற்றி பெற்றிருக்கும் என அமெரிக்கன் திங்க் டேங்க், செண்டர் ஃபார் ஸ்ட்ராட்டஜிக் அண்ட் இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் இணைந்து நடத்திய ஆய்வு தெரிவித்தது. ஆனால், ஓராண்டு கழித்து பிகாரிலும் டெல்லியிலும் நிலவரம் மாறியது. மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் வெவ்வேறு சமயங்களில் தேர்தல் நடத்துவது இந்தியாவை மேலும் ஜனநாயகத் தன்மை கொண்டதாக ஆக்குகிறது என்பதில் ஐயமில்லை. ஒரு சிலரது கைகளில் அதிகாரம் குவிவதை அது தடுக்கிறது.

மத்திய மாநிலத் தேர்தல்களை ஒன்றாக நடத்துவதற்குச் சொல்லப்படும் முக்கியக் காரணங்கள் இவைதாம்:

அடுத்தடுத்து தேர்தல்களை நடத்துவதால் ஏற்படும் பெரும் செலவு

தேர்தல் நடத்தை விதிகளால் அரசு நிர்வாகத்துக்கு ஏற்படும் சிக்கல்கள்

தேர்தலை நடத்துவதற்கான ஆள்பலம், அத்தியாவசியச் சேவைகளை வழங்குவதில் ஏற்படும் பாதிப்புகள்

யதேச்சாதிகார அரசுகளைக் காட்டிலும் ஜனநாயகம் என்பது செலவுபிடிக்கும் அமைப்பு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஜனநாயகத்தில்தான் சாதாரண மனிதருக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது. அதற்காக விலை கொடுக்க வேண்டும் என்றால் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

நாட்டின் பல இடங்களில் அவ்வப்போது நடக்கும் தேர்தல்களால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன. அரசு நிர்வாகத்துக்கு இவை இடையூறாக இருக்கின்றன, நிர்வாகத்தை மந்தமாக்கிவிடுகின்றன என்பதில் பிரதமருக்கும் ஏனைய கட்சித் தலைவர்களுக்குமிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டால் அந்த விதிகளைத் தளர்த்துவது பற்றி யோசிக்கலாம். தேர்தல் செலவுகளை அரசே ஏற்பதன் மூலம் கறுப்புப் பண ஆதிக்கம் நிலவும் தேர்தல் களத்தில் செலவைக் கணிசமாகக் குறைக்க முடியும். ஆனால், மக்களவை, சட்டமன்றங்கள் ஆகியவற்றுக்குக் குறிப்பிட்ட கால அளவைக் கட்டாயமாக நிர்ணயிப்பது ஜனநாயகத்தைத் தீவிரமாகப் பாதித்துவிடும். முறையற்ற கூட்டணிகள் மூலம் ஆட்சிகள் நடக்க இது வழி வகுத்துவிடும்.

ஒரு தேசம் ஒரு தேர்தல் என்பதும் ஒரு தேசம் ஒரே வரி, ஒரே தேசம் ஒரே சுகாதார அமைப்பு, ஒரு தேசம் ஒரே கல்வி என்பது போன்ற இன்னுமொரு கோஷமாகவே இருக்க முடியும். மத்திய மாநிலத் தேர்தல்கள் வெவ்வேறு சமயங்களில் நடப்பது இந்தியாவில் மட்டுமல்ல. மேலும் பல நாடுகளிலும் இப்படித்தான் நடக்கிறது. இவ்விஷயத்தில் கட்சியைக் காட்டிலும் ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தியே சிந்திக்க வேண்டும்.

நிரஞ்சன் முகோபாத்தியாய தில்லியில் பணிபுரியும், எழுத்தாளர், பத்திரிகையாளர். Narendra Modi: The Man, The Times and Sikhs: The Untold Agony of 1984 ஆகிய நூல்களின் ஆசிரியர்.

நன்றி: [thewire.in](https://thewire.in/186184/past-continuous-simultaneous-parliament-state-elections/)

தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *