இன்று (மார்ச் 8), மகளிர் தினத்தை முன்னிட்டு சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் ,தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் அழைத்து வாழ்த்து சொல்லி ஒருநாள் சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சிபிசிஐடியில் பணியாற்றி வரும் இரண்டாம்நிலை காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை, டிஎன்பிஎஸ்சி முறைகேடு, நீட் ஆள்மாறாட்டம் என முக்கிய வழக்குகளை இன்று வரையில் ஓய்வு இல்லாமல் விசாரித்து வருகின்றனர்.
வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் சென்னை தலைமை அலுவலகத்துக்குச் சென்று சுழற்சி முறையில் டூயூட்டி பார்த்து வந்தார்கள் . கீழ்மட்ட ஊழியர்கள் முதல் டிஎஸ்பி, எஸ்பி, ஐஜி வரையில் ஓய்வு இல்லாமல் வேலை வாங்கிக்கொண்டிருந்த டிஜிபி ஜாபர் சேட்டை, சில நாட்களுக்கு முன்பு மகளிர் ஆய்வாளர்கள், எஸ்பி மற்றும் அலுவலக ஊழியர்கள் சந்தித்தனர்.
அவரிடம், மார்ச் 8ஆம் தேதி , மகளிர் தினம் வருகிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று வீட்டு வேலையே சரியாக இருக்கும். எனவே மற்ற நாளில் ஒருநாள் அனுமதி கொடுத்தால் ஒருநாள் சுற்றுலா போய்விட்டு சந்தோஷமாக இருந்துவிட்டு வருவோம்” என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்ட டிஜிபி, தனது அலுவலகத்தில் எத்தனை பெண்கள் வேலை செய்கிறார்கள் என்று கேட்டிருக்கிறார். 65 பேர் என்றதும், அப்படியா என்று ஆச்சரியத்துடன் கேட்டவர், நேற்று முன்தினம் (மார்ச் 6) வெள்ளிக்கிழமை அனைவரையும் அழைத்து கேக் வெட்டி, பெண்களின் சாதனைகள் குறித்துப் பேசி அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு வேலை செய்யும் பெண்கள் அனைவரையும் அலுவலகச் செலவில் சுற்றுலா சென்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்புங்கள் என்று வழியனுப்பி வைத்துள்ளார். இந்தத் தகவல்களைக் கேட்ட கமிஷனர் ஆபீஸ், டிஜிபி ஆபீஸ் பெண் ஊழியர்கள், அதிகாரிகள், நமக்கு ஒருநாள் பர்மிஷன் யாரும் கொடுக்கவில்லையே என்று வினவுகிறார்களாம்.
**-வணங்காமுடி**�,”