nகோப்பை யாருக்கு: டெல்லியில் பலப்பரீட்சை!

Published On:

| By Balaji

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையைத் தட்டிச் செல்லும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

டெல்லியில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய தரப்பில் உஸ்மான் காவாஜாவும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். ஜடேஜாவின் சுழலில் 27 ரன்களில் ஸ்டம்புகள் சிதற பிஞ்ச் வெளியேறினாலும் பின்னர் வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் காவாஜாவுடன் சிறப்பான கூட்டணி அமைத்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அந்த அணி 300க்கும் அதிகமான ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் காவாஜா தனது இரண்டாவது சதத்தை அடித்தார். முதல் போட்டியில் 50 ரன்கள் எடுத்திருந்த காவாஜா இரண்டாவது போட்டியில் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்றாவது போட்டியில் 104 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மொகாலியில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் 91 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தைத் தவறவிட்டார். இன்றைய போட்டியிலும் சதம் அடித்து சரியாக 100 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார்.

அவருடன் இணைந்து விளையாடிய ஹேண்ட்ஸ்கோம்ப் 52 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த வீரர்களை இந்தியப் பந்து வீச்சாளர்கள் எளிதில் வீழ்த்தியதால் ஆஸ்திரேலியாவின் ரன் வேட்டை கட்டுப்படுத்தப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆஸ்டன் டர்னர் தலா 20 ரன்கள் அடித்து வெளியேறினர். இறுதி நேரத்தில் பந்துவீச்சாளர்களான ஜே ரிச்சர்ட்ஸன், பேட் கம்மின்ஸ் முறையே 29, 15 ரன்கள் அடித்ததால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது.

அதைத் தொடர்ந்து 273 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள இந்திய அணி 16 ஓவர்கள் முடிவில் இரு விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மாவும் (35) ரிஷப் பந்த்தும் (8) களத்தில் உள்ளனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share